Monday, 19 November 2018

ஈஶ்வர ஸ்ருஷ்டிகளை ஆராய்தல்

அஸ்மத்குருபரம்பராப்யோ நம:
அம்ருதலஹரீ 190-191
1959-அக்டோபர்

ஶ்வர ஸ்ருஷ்டிகளை ஆராய்தல்


        ஈச்வரன் உளனென்று கொள்ளும் ஆஸ்திகர்கள் விரலிட்டு எண்ணத்தக்கவர் களாயும், ஈச்வரன் இலனென்று கூறும் நாஸ்திகர்கள் அபரிமிதர்களாயு மிருப்பதாகச் சொல்லுகிறார்கள். மஹாமேதாவிகளென்று பேர் படைத்தவர்களுங்கூட நாஸ்திக மதத்தையே சார்ந்து நிற்பதாகக் கூறுகின்றார்கள். அதி நிற்க. தார்க்கிகர்கள் ஈச்வரனை யொப்புக் கொள்பவர்களாயிருக்கச் செய்தேயும் சாஸ்த்ர பலத்தாலே ஒப்புக் கொள்ளாமல் அநுமானத்தைக் கொண்டு ஒப்புக் கொள்ளுகிறார்களென்பது பற்றியே வைதிகர்களால் அவர்கள் வெறுக்கப் படுகிறார்கள். இங்குச் சிலர் சொல்லுவதென்ன வென்றால், ஈசவரனை இல்லை செய்யாதே ஒப்புக்கொள்ள வேண்டியது தானே முக்கியம்; எந்த வழியினாலொப்புக் கொண்டாலென்ன? சாஸ்த்ரம் போல் அநுமானமும் ஒரு ப்ரமாணந்தானே, ஈச்வரனி அந்தப் ப்ரமாணத்தினாலொப்புக் கொண்டாலும் பாதகமில்லையே யென்கிறார்கள்.
        இது பிசகு; அநுமானமென்பது தர்க்கவாதம். அதனால் ஈச்வரனை யொப்புக் கொள்வதானால், தர்க்கவாதத்தில் மேன்மேலும் சதுரர்கள் இருக்கக் கூடும்; அவர்களுடைய சாதுர்யத்தினால் ஒருவர் ஸாதித்த பொருளுக்கு பங்கம் ஏற்படவுங்கூடும். ஆகவே அந்த வழி ஸாபாயமானது. சாஸ்த்ரத்தைக் கொண்டு ஈச்வர ஸத்பாவத்தைஸாதிப்பதே நிரபாயமான வழி என்பது வைதிகர்களின் கொள்கை.
        இதுவும் நிற்க. தார்க்கிகர்கள் எவ்விதமான அனுமானத்தினால் ஈச்வரனை ஸாதிக்கிறார்களென்பதைச் சிறிது விவரிப்போம். உலகத்தில் வீடு, மண்டபம், கோபுரம், பிரகாரம் முதலானவற்றைப் பார்க்கிறோம். அவை ஒருவரால் அல்லது பலரால் நிர்மாணம் செய்யப்பட்டிருக்க வேண்டுமே யொழிய ஒருவருமின்றித் தாமாகவே உற்பத்தி யடைந்திருக்க முடியாது. காரியப் பொருள்கள் யாவற்றையும் கர்த்தாவோடு கூடியவைகளாகவே அறுதியிடுகிறோம். நாம் மண்ணையும் மணலையும் கற்களையும் மரங்களையும் கொண்டு வீடு கட்டுகிறோம். வீட்டுக்குக் கர்த்தாவை நாம் தெரிந்து கொள்ள முடிகிறதேயன்றி கல் மரம் முதலியவற்றிற்குக் கர்த்தாவைத் தெரிந்து கொள்ள முடிகிறதில்லை. சாஸ்த்ர விச்வாஸமுடைய வைதிகர்கள் ஸர்வேச்வரனையே அவற்றுக்குக் கர்த்தாவாக எளிதில் சொல்லிவிடுகிறார்கள். தார்க்கிகர்களோ வென்னில்,
क्षित्यङ् कुरादिकं सकर्त्रुकम्; कार्यत्वात् घटवत् य्द्यत्कार्यम् तत्तत् सकर्त्रुकं
என்று ப்ரயோகம் பண்ணுகிறார்கள். ‘நிலமோ நிலத்திலிருந்து வெளிப்படும் பொருள்களொ யாவும் ஒரு கர்த்தாவை யுடையனவாகவே யிருக்கவேண்டும்; காரியம் பொருளாகையாலே; எது எது காரியப் பொருளோ அதுவெல்லாம் கர்த்தாவோடு கூடியதுதான் என்பது மேலே குறித்த ப்ரயோகத்தின் பொருள். அந்த கர்த்தா விசித்ர சக்தியுக்தனான ஸர்வேச்வரன் என்று முடிக்கிறார்கள்.
        நாஸ்திக மஹா மேதாவிகளோ வென்னில் அவ்வப் பொருள்கள் இயற்கை யாகவே தோன்றுகின்றன வென்றும் ஒரு கர்த்தா இருந்து தீரவேண்டிய அவசியமே யில்லை யென்றும் கூறுகின்றார்கள். இதைப்பற்றி ஏராளமான புத்தகங்களும் வரைகின்றார்களாம். अज्ञ्स्सुखमाराध्य: सुखतरमाराध्यते विशेषज्ञ:। ज्ञानलवदुर्विदग्धं ब्रह्माऽपि नरं न रञ्जयति ॥ - அஜ்ஞஸ் ஸுகமாராத்யஸ் ஸுகதரமாராத்யதே விசேஷஜ்ஞ:, ஜ்ஞாநலவ துர்விதக்தம் ப்ரஹ்மாபி நரம் ரஞ்ஜயதி.” என்ற பர்த்ருஹரி ஸுபாஷிதம் அவர்களையே நோக்கிப் பிறந்ததாதலால் அன்னவர்களை நாம் திருத்த முயல்வது பழுதேயாம்.
        நம்பிள்ளை யென்னு மாசிரியர் பகவத் விஷயத்தில் ஓரிடத்திலருளிச் செய்கிறார்-
அவன் தந்தத்தை யுண்டு அவனை யில்லை செய்யும் பாபிகளிறே ஸம்ஸாரிகள்என்று.
இந்த வாக்கியத்தில் அவன் என்றது ஸர்வேச்வரனை. ஸர்வேச்வரன் நம்மிடத்துப் பரம கருணையோடு தந்தருளின பதார்த்தங்களைக் கொண்டு வயிறு வளர்த்துப் போருமவர்கள் ஸர்வேச்வரன் கிடையவே கிடையாதென்று கையெழுத்திடத் துணிகிறார்கள் என்கை.
        உலகத்தில் விளைகின்ற பொருள்களை நாம் ஊக்கத்தோடு நோக்க வேணும். காய்கள் கறிகள் கனிகள் தானியங்கள் என்றூ நாம் சொல்லப் புறப்பட்டால் முற்றுப் புள்ளியிட வொண்ணாத பொருள்களுள்ளன வென்று அறிகின்றோம்.
        தாரகம் போஷகம் போக்யம் (அல்லது) போக்யம் போகோபகரணம் போக ஸ்தானம் என்று சுருக்கிச் சொல்லக்கூடிய பதார்த்தங்களும் மனிதர்களாகப் பிறந்த நம்முடைய உபயோகத்திற்கு இன்றியமையாதவைகளாக வுள்ளன. இவையில்லை யென்றால் ஒரு நொடிப்பொழுதும் நம்மால் ஜீவித்திருக்க முடிவதில்லை. ஒரு அரசன் தன்னுடைய ராஜ்யத்தில் சிறைக்கூடம் அமைக்கிறான்; குற்றவாளிகளை அதில் அடைக்கிறான். அவர்களைப் போஷிப்பதற்கு வேண்டிய சரக்குகளை முன்னாடியே ஸித்தப்படுத்தி வைத்துக்கொண்டு இக்காரியத்தைச் செய்கிறானே யொழிய சரக்கில்லாதவன் இது செய்வதில்லை யென்பதை எங்குங் காணா நின்றோம். இது போலவே நமது ஸர்வேச்வரனும் அளவு கடந்த அபராதங்கள் செய்த நம்மை இந்த ஸம்ஸாரமாகிற சிறைக்கூடத்திலே யடைக்கும்போது நாம் உபஜீவிக்க வேண்டி ஸகலவிதமான பதார்த்தங்களையும் குறையறப் படைத்து வைத்திருக்கிறான். அவற்றைக் கொண்டு நாம் வயிறு வளர்க்கிறோம். செய்ந் நன்றி குன்றி அவனை இல்லை செய்கிறோம்.
        உலகில் அவரவர்கள் உபந்யாஸங்கள் பாட்டுக் கச்சேரிகள் முதலான பல வகைக் காரியங்களினால் மிகவும் சிரமப்பட்டு விச்ராந்தி பெற வேண்டிய ஸமயத்தில் பல ஸம்பாரங்கள் சேர்த்துக் காய்ச்சின மதுரமான பாலை எதிர் பார்க்கிறார்கள். அது தவறாமல் கிடைக்கும்படியான ஏற்பாடுகளை முன்னாடியே செய்து வைக்கிறார்கள். மக்களோ மனைவியரோ பணியாளர்களோ ஜாக்கிரதையாக விருந்து அதை ஸித்தமாகக் கொடுக்கிறார்கள். எதிர் பார்த்தபடி அது கிடைக்கவில்லை யென்றால் கண்டவர்கள் மேலும் எரிந்து விழுகிறார்கள். பால் என்கிற பொருள் முதலிலேயே இல்லையானால் யார்மேலெரிந்து விழுவது? பாலைக் கறந்து காய்ச்சிக் கொடுப்பவர்கள் நமக்குக் கட்கூடாகத் தெரிகிறார்கள். பாலைப் படைத்தவன் மறைந்து நிற்கிறான். ஏன் மறைந்து நிற்கிறானென்பதை ஆலோசிக்க மதியில்லையா இவர்களுக்கு?
        ஆலோசித்த மேதாவிகள் தெரிவிக்கின்றார்கள்;- பாலைக் காய்ச்சிக் கொடுப்பவர்கள் மீது குற்றங்குறைகள் கண்டால் அவர்களை அடிப்பதும் புடைப்பதுமாவதைக் காண்கின்றோ மல்லவா? இவ்வண்ணமாகவே பாலைப் படைப்பவனும் கண்ணில் பட்டால் அவன் மீதும் குற்றங் குறைகள் காண நேர்ந்து மேலே சொன்ன தண்டனைகள் அவனுக்குங் கொடுக்க ப்ராப்தமாகுமன்றோ. அதற்கு அஞ்சியே அவன் மறைந்து நிற்பதாக ஸ்ரீவசனபூஷண திவ்ய சாஸ்த்ரம் கூறுகின்றது – “கண் காண நிற்கில் ஆணையிட்டு விலக்குவர்களென்று கண்ணுக்குத் தோற்றாதபடி நின்றுஎன்று (4-1). முமுக்ஷுப்படியில்இராமடமூட்டுவாரைப் போலே உள்ளே பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போரும்என்றருளிச் செய்தது முணர்க.

eeefff

No comments:

Post a Comment

க₃த்₃யத்ரயம்

ஶ்ரீமதே ராமாநுஜாய நம : எம்பெருமானார் அருளிச் செய்த க ₃ த் ₃ யத்ரயம் [ ஶரணாக ₃ தி க ₃ த் ₃ யம் , ஶ்ரீரங்க ₃ க ₃ த் ₃ யம் , ஶ்ரீவை...