ஸ்ரீ
முகவுரை
(மநீஷமாந்ய, ராவ்பஹதூர், ஸ்ரீஉவே. R. நரஸிம்ஹய்யங்கார், மதுரை)
நற்போதுபோக்கென்னுமிந்நூலை
ஸ்ரீஸ்வாமிகள் எழுதி அடியேனுக்கனுப்பினார். ஸ்ரீஸ்வாமிகளின்
க்ரந்தங்களெல்லாம் அச்சான பிறகு அடியேனுக்குக் கிடைப்பதும் அவற்றைக்கொண்டு அடியேன்
ஆனந்தமாகப் போதுபோக்குவதும் இருபத்தைந்து வருஷகாலமாக நடந்துவருகிறது. இந்த க்ரந்தத்தை மாத்திரம் கையெழுத்துக் காபியாகவே
அடியேனிடமனுப்பியருளினதை ஆலோசிக்கையில், இது
அடியேனுடைய ஸொந்த அனுபவத்திற்குமாத்திரமிருக்கட்டுமென்று திருவுள்ளம்பற்றி
யனுப்பியதாக இருக்குமோ வென்றுதோன்றி இதைப்பலகால் படித்தேன். படித்ததில், இவ்வுலகம்
முழுதும் இப்புத்தகத்தைப் படித்து இன்புறவேண்டியது மிக அவசியமென்று தோன்றியதனால்
அடியேன் இதை அச்சிடுவித்து ஸ்ரீ ஸ்வாமி ஸன்னிதானத்திற்கு அனுப்பிவைக்கிறேன்.
அடியேன் வைதிகஸமாஜங்களில் சொற்பொழிவாற்றத்
தகுந்த கல்வி படைத்திலேனாகிலும் ஆசார்ய அனுக்ரஹத்தினால் பல பெரிய சபைகளிற்
பேசியுமிருக்கிறேன். ஸ்ரீ ஸ்வாமியின்
உபந்யாஸ அமுதப்பெருக்குகளை அடியேன் மதுரையில் பலகால் அநுபவித்தவன். சென்னை தொண்டைமண்டலம் ஸ்கூல் ஹாலிலுஞ் சென்று அநுபவிக்க
ப்ராப்தமாயிற்று. உபந்யாஸ ச்ரவணங்கள் தவிர, ஸதாகாலமும் ஸ்ரீ ஸ்வாமியின் திவ்ய க்ரந்தங்களைக் கொண்டேதான்
அடியேன் போதுபோக்கி வருவது. “இவர் நம்மாழ்வாரோ! உடையவரோ! நம்பிள்ளையோ! மணவாளமாமுனிகளோ! அன்றி
அவர்களெல்லாரும் ஒன்று சேர்ந்து அவதரித்த திருக்கோலமோ!” என்றே
அடியேன் நினைத்திருப்பதும் பல ஸபைகளிற் பேசியிருப்பதும்.
இந்த ஸ்வாமிகளின்
அமுதமொழிகளைக்கொண்டே போதுபோக்குமவர்கள் என்னைப்போலவே ஆங்காங்கு பலபலர்
உள்ளார்களென்பதை அடியேன் நன்றாக அறிந்தவன். அவர்கள்
நித்தியமும் ஒருமுறை இச்சிறு புத்தகத்தை வாசித்து வந்தால் இதுவே ஒரு நல்ல
போதுபோக்காயிருக்குமென்று அடியேன் மனதிற் பட்டது போலவே அடியேனுடைய ஆப்த நண்பர்
ஸ்ரீ உபவே. (வக்கீல்) S. ஸுந்தரராஜய்யங்காருடைய
திருவுள்ளத்திலும்பட்டபடியால் இதனை ஒரு அரிய பெரிய விருந்தாக உலகுக்கு
அளிக்கின்றேன்.
ஸ்வாமிகளின்
உபந்யாஸங்களைக்கேட்க பாக்கியமுள்ளவர்கள் தேவஸபையில் அம்ருதம்பரிமாறி புசிப்பதுபோல்
அனுபவிக்கிறார்கள். அளவு பார்த்து
போதிக்கும் சக்தி ஸ்வாமிகளுக்கு விசேஷமானது. இப்புத்தகத்தில்
கண் செலுத்துவோர் விஷயத்தில் குறிப்பாக இறங்கினால் மஹத்தான ஞானத்தையும்
ஆனந்தத்தையும் அடைவார்களென்று உறுதிகூறுவேன்.
தாஸன்,
Rao
Bahadur. R. Narasimha Iyengar,
Madura.
29-2-48.
ஸ்ரீரஸ்து
நற்போதுபோக்கு
-
ஸ்ரீகாஞ்சீ பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரியர் -
காப்பு
வரவர முனியடி
வணங்கும் வைதிகர்
திருவடி யிணைகளென்
சிரமேற் சேர்கவே.
வடமொழியில்
வழங்கும் காலக்ஷேப மென்கிற சொல்லுக்குத் தமிழில் போதுபோக்கென்று பெயர். ஸ்ரீபாஷ்யம்
ஸேவித்தல், பகவத்விஷயம் ஸேவித்தல் என்று சொல்லவேண்டிய ஸ்தானத்தில்
ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் பகவத்விஷய காலக்ஷேபம் என்றே தொன்று தொட்டுப் பெரியார்கள்
வழங்கிவருகிறார்கள். காலக்ஷேப மென்கிற சொல்லுக்கு ‘ஸேவிப்பது’ என்கிற
பொருள் எப்படி கூடுமென்றும் இந்த ப்ரயோகம் எப்படி பொருந்துமென்றும் சில
வ்யுத்பந்நர்கள் விமர்சிப்பதுண்டு. ஸ்ரீராமாயண காலக்ஷேபம் ஸ்ரீவசனபூஷண காலக்ஷேபம்
இத்யாதிகளான ஸகல வ்யவஹாரங் களுக்கும் இதுதான் பொருள்.
இப்படி
வ்யவஹரிக்கத் தொடங்கின பெரியார்களின் திருவுள்ளம் யாதெனில், விஷயங்களை
க்ரஹிக்கிறோமோ இல்லையோ அது எப்படியாயினுமாகுக; நல்ல
படியாகப் போதைப் போக்கினால் போதும் – என்பதேயாம்! ஆர்த்தியில்
“முன்னவராம் நம் குரவர் மொழிகளுள்ளப்பெற்றோம் முழுதுநமக்கவைபொழுது போக்காகப்
பெற்றோம்” என்று மணவாளமாமுனிகள் பணித்தபடியே பெரியோர்களுடைய
ஸ்ரீஸூக்திகளைகொண்டு போது போக்குவதென்பது ஜன்மாந்தர ஸஹஸ்ர நற்றவப்பயன்.
*காவ்ய
சாஸ்த்ரவிநோதேந காலோ கச்சதி தீமதாம்,
அந்யேஷாம் து மநுஷ்யாணாம் நித்ரயா கலஹே ந வா*
என்கிறச்லோகமொன்று யாவருமறிந்ததே. ஆங்காங்கு
அவரவர்கள் தம்தம் போதுகளை எப்படி போக்கிவருகிறார்களென்று நாற்புறமும்
பார்ப்போமாயின், உத்யோகஸ்தர்கள், வியாபாரிகள், பயிர்த்தொழிலாளர்கள், வக்கீல்கள்
முதலானாருடைய போதுபோக்குகள் ஒருவிதமாக நிகழ்ந்து வருகின்றன. சிலபேர்கள்
தேசவ்ருத்தாந்தப் பத்திரிக்கைகளைப் படித்தல், நாவல்களைப்படித்தல், சூது
சதுரங்கமாடுதல் …. முதலிய காரியங்களிலே காலத்தைச் செலவிடுகிறார்கள். இதுதவிர, நால்வர்
எண்மர் பதின்மராகக்கூடி ஒருகாசுக்குமுதவாத வம்புவார்த்தைகளை வெகு அட்டஹாஸங்களுடன்
பேசிக்கொண்டும், தங்கள் திரளிலே அந்வயிக்கப்பெறாமல் சுவடிகளிலும் பகவத்
பாகவத பரிசர்யைகளிலும் போதுபோக்கிவரும் மஹான்களைப் பற்றி ஏதேனும் பறை
சாற்றிக்கொண்டும் பத்துமணி காலத்தைப் பத்து நிமிஷமாகக் கழிக்கின்றவர்கள் சிறிய
கிராமம் முதல் பெரிய நகரம் வரையில் எங்குமுள்ளார்கள். அன்னவர்கள்
பெறுமானந்தம் அளவுகடந்தது.
ஆழ்வார்களுள் இரண்டு ஆழ்வார்கள் போதுபோக்கைப்
பற்றி வெகு இன்பமாகப் பேசியுள்ளார்கள். திருமழிசையாழ்வாரும் நம்மாழ்வாரும். இவ்விருவருடைய
இரண்டுபாசுரங்களை எடுத்துக்காட்டுகிறோம் காண்மின். திருமழிசையாழ்வார்
நான்முகன் திருவந்தாதியில் (63) *தரித்திருந்தேனாகவே …. தெரித்தெழுதி
வாசித்துங் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது* என்றருளிய
பாசுரம் ஒவ்வொருவரும் நிச்சலும் நினைக்கத்தக்கது. போதுபோக்கும்
விதத்தை இவரைப்போல் எடுத்துரைத்தவர் மற்றுயாருமில்லை. தெரித்தல்
எழுதுதல் வாசித்தல் கேட்டல் வணங்குதல் வழிபடல் பூசித்தல் ஆகிய இவற்றினாலேயே தாம்
போதைப்போக்கினதாகவும் இவையில்லையாயின் தம்மால் உயிர்தரிக்க முடியாததாகவும்
வ்யக்தமாக விளம்பியுள்ளார்.
நம்மாழ்வார் அருளிச்செய்வதோ இதனிலும்
விலக்ஷணமானது. அதாவது பெரிய திருவந்தாதியின் முடிவில் (பா. 86)
*கார்கலந்த மேனியான் கைகலந்தவாழியான், பார்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான் – சீர்கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையினாழ்துயரை, என்னினைந்து
போக்குவரிப்போது,* என்றுள்ள பாசுரம் சுவைமிக்க பொருளுடைத்து. அப்பொருளைச்
சிறிது விவரிக்கிறோம்; எம்பெருமானுடைய திருக்குணங்கள் நிரம்பிய ஸ்ரீ ஸூக்திகளை
யநுஸந்தித்தால் பாவங்களும் துன்பங்களும் தொலையுமென்று சில பெரியார் நினைப்பதும்
சொல்லுவதுமுண்டு; ஆழ்வார் என்ன சொல்லுகிறாரென்றால், பாவங்களும்
துன்பங்களும் தொலைந்தால் தொலையட்டும் வளர்ந்தாலும் வளரட்டும், அதைப்
பற்றி என்ன கவலை? இவ்வுலகில் நாம் வாழ்கிறவரையில் நம்முடைய போது போக வேண்டுமே; போதை
எப்படி போக்குவது? பகவத்குணங்கள் மலிந்த ஸ்ரீஸூக்திகளைக் கொண்டுதானே போதைப்
போக்கவேண்டும்; வேறு எதைக்கொண்டு போதைப்போக்குவது! ஒவ்வொருவனும்
போதைப்போக்கியாக வேண்டுமே, குணாநுபவம் தவிர வேறு எந்தக்காரியஞ் செய்தால்
போது போகும்? வேறொன்றாலும் போது போக்க வரிதன்றோ. சீர்கலந்த
சொல்நினைந்து சூழ்வினையினாழ்துயரைப் போக்காரேல் போக்கா தொழிக; இப்போதை
என்னினைந்து போக்குவர்! என்று அருளிச்செய்கிற அழகு என்னே!
உலகத்தில்
ஒவ்வொருவனும் பகவத்குணாநுபவம் பண்ணியா போதைப் போக்குகிறான்? இல்லையே. சூதுசதுரங்கமாடியும்
உண்டியே உடையே உகந்தோடியும் மாரனார் வரிவெஞ்சிலைக்கு ஆட்செய்தும் மற்றும் பல பல
செய்துமன்றோ அவரவர்கள் போது போக்கி வருவது. குணாநுபவத்தால்
போது போக்குவாராக ஒருவரையுங் கண்டிலோமே; “ஸாக்ஷாத்க்ருத ஸ்வபரவ்ருத்தாந்தர்க்கு” என்று
ஆசார்ய ஹ்ருதயத்தி லருளிச் செய்கிறபடி உலகியற்கை ஒன்றுதப்பாம லுணர்ந்தவரான ஆழ்வார்
“என்னினைந்து போக்குவரிப்போது” என்று குணாநுபவத்தாலன்றி போதுபோக்க
முடியாதென்று ஏன் சொல்லுகிறார்? என்று அடியேன் ஒருநாள் ஜீயர் ஸ்வாமியைக் கேட்டேன்; அதற்கு
இரண்டு கதைகள் ஸாதிக்கலாயிற்று.
(1) கள்ளங்கவடறியாத
ஒருஸ்வாமி தம்திருமாளிகை வாசலில் தென்னைமரம் வளர்த்திருந்தார்; அதில்
காய்கள் நிறையக் காய்த்திருந்தன. ஒரு நாளிரவு திருடன் மரத்தின் மீதேறிக் காய்கள்
பறிப்பதாக அவர் அறிந்துகொண்டு இரண்டு மைல் தூரத்திலுள்ள டாணாவுக்குச் சென்று
போலீஸ் சேவகனை யழைத்துக்கொண்டு வர எண்ணினார். அங்குப்
போய்வர ஒரு நாழிகை ஆகுமாதலால் அதற்குள் கள்ளன் இறங்கி ஓடிப்போய்விட்டால் என்ன
செய்வதென்றும் ஆலோசித்தார்; ஒரு உபாயம் தோன்றி அப்படியே செய்தார். உள்ளிருந்து
பெருமாள் திருவாராதனத் தீர்த்தத்தைக் கொணர்ந்து மரத்தின் கீழே நிறையத்
தெளித்துவிட்டு ‘இது பெருமாள் தீர்த்தமாகையாலே இதை யாரும் மிதிக்கலாகாது’ என்று
உரக்கச் சொல்லிவிட்டுஉடனே டாணாவுக்குச் சென்றார். ‘தேங்காய்க்
கள்ளனைக் கையும் பிடியுமாகப் பிடிக்கவேணும், கையோடு வாருங்கள்’ என்று
சேவகனையழைத்தார்! அதற்கு அவன் ‘ஸ்வாமீ! கள்ளன்
இன்னுமா மரத்தின்மேலேயே இருப்பான்? இதுவரையில் அவன் வீடுபோய்ச் சேர்ந்திருப்பனே’ என்றான். அதற்கு
இவர் சொல்லுகிறார் – அம்மரத்தின் கீழ்ப்பாகம் முழுதும் பெருமாள் தீர்த்தத்தை
தெளித்துவிட்டு கள்ளன் காதிலும் கேட்கும்படி அதை உரக்கச்சொல்லிவிட்டன்றோ நான்
வந்திருக்கிறேன்; பரிசுத்தமான அவ்விடத்தை மிதித்துப்போக முடியாதாகையாலே அவன்
மரத்தின் மீதுதான் இருப்பன், வாருங்கள் என்றார். தம்மையே
யொப்பப் பிறரையும் நினைக்கிறபடியன்றோவிது.
(2) பரமை
காந்தியாய்ப் பரமவைதிகரான வொரு ஸ்வாமி இரவில் சயனிக்கும்போது தம் தேவியையழைத்து ‘அடீ! சொம்பில்
ஜலம் வைக்காதே; கவிழ்த்து வை’ என்று கட்டளையிடுவராம். இவரது
கருத்து என்னென்னில்; இரவிலே கள்ளன் வந்தால் சொம்பைக் கொள்ளைகொள்ள நினைத்து
அதனருகேவந்து அதை யெடுக்கப் பார்க்கும்போது, கையலம்பாமல்
சொம்பைத் தொடலாகாதென்று தீர்த்தம்தேடுவனாம்; தீர்த்தம்
கிடைத்தால் கையை யலம்பிக்கொண்டு சொம்பைக் கவர்ந்து கொண்டு செல்வனாம்; தீர்த்தம்
கிடையாவிடின் அசுத்தமான கையாலே சொம்பை எப்படி எடுப்பதென்று கூசி சொம்பைத் தொடாமலே
போய்விடுவனாம்; இதற்காகவே “சொம்பில் ஜலமின்றிக் கவிழ்த்துவை” என்று
தேவிக்குக் கட்டளையிடுவதாம்.
இதெல்லாம் ப்ராசீன
ப்ராமாணிகர்களின் சரிதைகள். தங்களுடைய ஆசாரமே கள்ளர்க்கும் உள்ளதாக
அவர்கள் நினைப்பதுபோல் ஆழ்வாரும் பகவத் குணாநுபவத்தாலன்றி மற்றெதனாலும் தமக்குப்
போதுபோக்க அரிதாயிருக்கு மியல்வையே உலகில் எல்லாருக்குமுள்ளதாக நினைத்து “சீர்கலந்த
சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையினாழ்துயரை, என்னினைந்து
போக்குவர் இப்போது” என்று உள்ளமுருகவருளிச் செய்கிறார். ஸ்ரீராமாயண
பாரதாதி இதிஹாஸங்களைக் கொண்டும் ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலிய புராணங்களைக்கொண்டும்
அருளிச்செயல்களைக் கொண்டும் பாவத்தைப்போக்கிக் கொள்ளார்களாகில் அதுபற்றி
விசாரமில்லை; போதைபோக்குவதற்கு இவையொழிய வேறு என்ன ஸாதனமுள்ளது! என்று
கூறின ஆழ்வாரை வழிபடுகின்ற நாம் நம்முடைய போதை எப்படி போக்க ஆசைப்படவேணுமென்று
இன்னமும் விவரிக்கவேணுமோ?
இரண்டாம்
அதிகாரம்
*நலத்தால்
மிக்கார் என்றும் *கலையிலங்கு மொழியாளர் என்றுமுள்ள ஸ்ரீஸூக்திகளுக்கு
லக்ஷ்யபூதர்களாய் விளங்கும் மஹநீயர்களைக்குறித்து *அசக்தாஸ்
தத்பதம் கந்தும் ததோ நிந்தாம் ப்ரகுர்வதே* எங்கிறபடியே
நிந்தனை மொழிகளைப் பலவகைகளாலும் பரவச்செய்துகொண்டு அதுவே போதுபோக்காக
இருப்பவர்களைக் குறித்து இங்கு நாம் விஜ்ஞாபிக்கவேண்டியதொன்றுமில்லை. ஈச்வரனுடைய
ஜகத் ஸ்ருஷ்டியானது மிக விசித்திரமானது. பொய் சொல்வது களவு செய்வது வஞ்சனை பண்ணுவது
முதலான தீய குணங்களையும், அஹிம்ஸை இந்த்ரிய நிக்ரஹம் க்ஷமை ஸத்யம் முதலிய
நற்குணங்களையும் ஒவ்வொரு க்ராமத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் பார்த்து வருகிறோம். நற்குணங்களோ, தீயகுணங்களோ அவரவர்கட்கு
இயற்கையாக அமைகின்றனவென்பதே பெரும்பான்மையான கொள்கை. வேம்புக்குள்ள கசப்பும், மாதுளைக்குள்ள புளிப்பும், கரும்புக்குள்ள தித்திப்பும்
முதலியன எப்படி ஒரு நாளும் மாறுவதில்லையோ அப்படியே மனிதர்களுக்கும் ஜன்மஸித்தங்களான
குணங்கள் (நல்லவையோ தீயவையோ) பேர்க்கவும் பேரா என்றே பெரியார் கூறுவர். இளமையில் பொய்
சொல்லியும் களவாடியும் வழக்கம் பெற்றவர்கள் அந்த வழக்கத்தை ஒரு நாளும் விடமுடிகிறதில்லை
யென்பதையும், இயற்கையாகவே
ஸத்யம் முதலிய நல்ல குணங்கள் அமையப் பெற்றவர்கள் ஒரு நாளும் அஸத்யவழியில் செல்கின்றிலர்
என்பதையும் எந்தவூரிலும் எந்த ஜாதியிலும் எக்காலத்திலும் பார்க்கலாம். ஆகவே *பச்யதி
பரேஷு தோஷாந் அஸதோபி, ஸதோபி நைவ குணாத், விபரீதமிதம் ஸ்வஸ்மிந், மஹிமா
மோஹாஞ்ஜநஸ்யைஷ:* என்று தேசிகன் ஸாதித்தபடி பிறரிடத்தில் இல்லாத தோஷங்களை
இருப்பனவாகக் காண்பதும் இருக்கின்ற குணங்களை இல்லை செய்வதும், தம்மிடத்தில்
உள்ள தோஷங்களைக் காணாமல் இல்லாத குற்றங்களை இருப்பனவாக ப்ரமிக்கையுமாகிற இந்த
மஹாஸம்பத்தை மோஹாஞ்ஜந மஹிமையினால் சிலர் இயற்கையாகவே பெற்று வாழ்கின்றார்களென்றும்
அதற்குத்தகுந்தபடி அமையக்கூடிய அவர்களது போதுபோக்கை மாறுபடுத்த
மாதவனாலுமாகாதென்றும் இதையும் நாம் எங்கும் அநுபவத்திற் காணாநின்றோம்.
ஆனால்
இங்கு நாம் தெரிவிக்க விரும்புகின்றதென்ன வென்றால், கேண்மின். யானையும், குதிரையும் பெருமாள்
புறப்பாட்டுக்கு கம்பீரமாக உபயோகப்படுவது போல மற்ற ஜந்துக்கள் ஏன் உபயோகப் படுவதில்லை
யென்று ஒருவர் கேட்டால் இதற்கு என்ன பதில் சொல்லுவது? யோக்யதைக்குத் தகுந்தபடி
உபயோகம் நேர்கின்றது என்றிவ் வளவே சொல்லமுடியும். நல்ல வழிகளில் போது போக்க யோக்யதையற்றவர்கள்
ஏதோவொரு வழியில் தங்கள் போதைப் போக்கித்தானே யாகவேண்டும். குயிலும் காக்கையும் பெரும்பாலும்
வடிவில் ஒத்திருக்கச் செய்தேயும் செய்கையில் ஏன் ஒத்திருக்கவில்லை யென்று யாரை யார்
கேட்பது? அதுபோல, சிலர் சீர்கலந்த சொல்
நினைந்து போதுபோக்காதே தங்களுக்கு ஸுலபஸாத்யமான வகையில் போதுபோக்கி வருகின்றார்களென்றால்
இதில் வியப்பு ஒன்றுமில்லையே. ஸத்துக்களையும் ஸாதுக்களையும் நிஷ்காரணமாகப்
பழிப்பதையே போதுபோக்காகக் கொண்டவர்கள் சிறிது விவேகிகளாயிருந்தால் ஒன்று
ஆலோசிக்கவேண்டும்; மஹான்களைப்பற்றித் தாங்கள் செய்யும் நிந்தைகளினால்
தங்களுக்கு ஜன்ம ஸாபல்யமாகிற வொரு லாபம் ஸித்தித்தாலும் அந்த மஹான்களுக்கு என்ன நஷ்டமுண்டாகு
மென்பதை மாத்திரம் சற்று விமர்சிக்கவேணுமவர்கள்.
மூன்றாம் அதிகாரம்
திருவாய்மொழியில் நம்மாழ்வார் அற்புதமாக ஒரு
பாசுரம் அருளிச் செய்கிறார்; அதாவது (5-3-5) *கடியன்
கொடியன் நெடியமால் உலகங்கொண்டவடியன், அறிவருமேனி
மாயத்தன்* இத்யாதி. இதன் பொருளின்பத்தைச் சிறிது விவரித்து
அடியேனும் ஆனந்தித்து பக்தர்களையும் ஆனந்திக்கச் செய்கிறேன். ஆழ்வார்
ஆண்மை தவிர்ந்து பெண்மையடைந்து பேசும் பாசுரமிது. பராங்குசநாயகி
யென்று இப்போது ஆழ்வார்க்குத் திருநாமம். இப்பெண் பிள்ளைக்கும் தோழிக்கும் பேச்சு நடந்து
வருகிறது. தோழியானவள் இப்பெண்மணியை நோக்கி “பேதாய்! நீ பகவான்
பகவானென்று எப்போதும் வாய் வெருவி வீணாக வருந்துகிறாயே; இந்த
கஷ்டம் உனக்கு ஏதுக்காக? அவன் குணசாலியாயிருந்தால் அவனிடத்தில் நீ எவ்வளவும்
ஈடுபடலாம்; குணஹீநனான அவனிடத்தி நீ வீணாக ஆசைவைத்துத் தவிப்பது
வேண்டாமே” என்று கூறினளாக, அதற்குப் பராங்குச நாயகி மறுமொழி
கூறுகின்றாளிப்பாட்டினால். “தோழீ! எம்பெருமானை நான் மஹாகுணசாலியென்கிறேன், நீயோ அவனை
குணஹீநனென்கிறாய். நான் சொல்லுகிறபடியன்றிக்கே நீ சொல்லுகிறபடியே
குணஹீநனானாலும் என் நெஞ்சம் அவனையல்லது அறியாது, அவனிடத்தில்
நின்றும் என்னை மீட்பதற்காகவன்றோ நீ அவனை குணஹீநனென்பது. மிகவும்
ஸந்தோஷம். குணஹீநனென்பதுபற்றியே அவனை நான் மேல்விழுந்து
விரும்புகிறேனென்று திண்ணமாகக் கொள்ளவேணும் நீ! அவனிடத்தில்
குணமில்லையென்பதைச் சொல்ல வேண்டுமானாலும் தோழீ! நான்
சொல்லவேணுமேயல்லது நீ சொல்லலாகுமோ? அவனையும் என்னையும் கூட்டிவைத்தது
மாத்திரமேயன்றோ உன் காரியம்; அவனோடு உள்கலந்து பரிமாறினவள் நானேயல்லது
நீயல்லையே; அவனிடத்திலுள்ளது தோஷமோ குணமோ எதுவானாலும் எனக்குத்
தெரிந்தவளவு உனக்குத் தெரிய ப்ரஸக்தியில்லையே. ஆகையாலே
குணமில்லாமை யையும் தோஷ முடைமையையும் என்வாயால் நான் சொல்ல நீ கேளாய் என்று பீடிகை
போட்டுக்கொண்டு *கடியன் கொடியனென்று தொடங்கி
இரண்டடிகளாலே அவனுடைய குணக்கேட்டைச் சொல்லுகிறாள் பராங்குச நாயகி (ஆழ்வார்).
சொல்லுகிற
குணக்கேடுகள் எவை யென்னில்; கேண்மின்;- [கடியன்] தன்
காரியத்தை ஸாதித்துக்கொள்ளுவதில் கனவேகமுடையவன். அதாவது, தனக்கு
விருப்பமுண்டானால் தானேவந்து மேல்விழுந்து விரைந்து கலக்குமவன் என்கை. [கொடியன்] எதித்தலைபடுகிற
கஷ்டம் பாராதே கல்நெஞ்சனாய்ப்பிரிந்து போமவன். [நெடியமால்] மிகவும்
பெரியவன் என்பது இச்சொல்லின் பொருள். இதன் கருத்தாவது, மேல்விழுந்து
கலக்கும்போது பிரியவேணுமென்று நினைப்பன். அப்படி அவன் நினைத்ததை யறிந்து ‘என்னாயனே! பிரியலாகாது
பிரியலாகாது’ என்று கால்கட்டி விலக்கப்பார்க்கலாமே, அப்படி
விலக்குவதற்குக் கூசி நடுங்கி அஞ்சியிருக்க வேண்டும்படி திடீரென்று பரத்துவம்
பாராட்டி நிற்பவனென்கை. [உலகங் கொண்ட வடியன்] பிறருடைமையைத்
தனக்காக்கிக் கொள்ள நினைத்தால் பின்னை அவர்களுக்கு ஒன்றும் மிச்சப்படாதபடி பண்ணி
அவர்களைப் பாதாளத்திலே தள்ளுமவன். [அறிவருமேனிமாயத்தன்] வடிவைக்கண்டால்
ஸர்வஸ்வதானம் பண்ணவிருக்கிறானோ? அன்றி ஸர்வஸ்வமும் கொள்ளைகொள்ள
விருக்கிறானோவென்று தெரிந்து கொள்ள முடியாதபடி ஆச்சரியமான தன்மையையுடையவன். அடியேன்
குடியேனென்று சில சொல்லி மயக்கிக் கண்ணிலே மணலைத்தூவி யோடிப்போமவன்.
இப்படிப்பட்ட
குணக்கேடுகளைக் கோடிக்கணக்காகச் சொல்லவேணுமானாலும் நானன்றோ சொல்லவேணும், எனக்கன்றோ
மருமம் தெரியும். தோழீ! இவை உன்னாலும் சொல்லமுடியாது, இதற்கென்றே
இட்டுப்பிறந்த சிசுபாலாதிகளாலும் சொல்ல முடியாது. இவ்வளவு
குணக்கேடுகளையும் நான் அறிந்துவத்தேயன்றோ இவ்விஷயத்தி லீடுபட்டுக்கிடக்கிறது. இவை
தோஷங்களேயானாலும் அவனுடைய தோஷங்களாகை யாலே அவன் ஸம்பந்தத்தையிட்டு இவை நமக்கு
உபாதேயங்களேயென்று என்னெஞ்சுகொள்ளுகின்றது; (அல்லது) கீழ்ச்சொன்ன
விசேஷண பூதங்களான குணக்கேடுகளில் நோக்கு இல்லாமே விசேஷ்ய பூதனான அவனைமாத்திரமே
என்னெஞ்சு பற்றியிருக்கின்றது. மாயாவாதிகள் “நிர்விசேஷ
சிந்மாத்ரம் ப்ரஹ்ம” என்று விசேஷண ஸம்பந்த கந்தமுமற்ற விசேஷ்ய அம்சத்தை
மாத்திரமே அங்கீகரிக்கிறாப்போலே குணமோ குணக்கேடோ ஆகிய விசேஷணாம்சத்தில்
கண்செலுத்தாமல் வெறும் விசேஷ்யமான அவனளவில் மாத்திரமே என்னெஞ்சு
ஊன்றியிருக்கின்றது என்பதாக [ஆகிலுங் கொடியவென்னெஞ்சம் அவனென்றே
கிடக்குமெல்லே] என்கிற மூன்றாமடி அமைந்தது.
உலகர்களே! இது
எம்பெருமான் விஷயத்தில் மாத்திரமன்று, அன்பு உள்ள விடங்களிலெல்லாம் இப்படித்தான்
பரிமாற்றமுள்ளது. அன்பு வைத்திருப்பாருடைய அன்பைக் குலைக்கவேணுமென்று
நினைத்து எவ்வளவு தோஷங்களை நிரூபணம் செய்தாலும் “ஊரவர்
கவ்வை யெருவிட்டு” என்ற கணக்கிலே மெய்யன்பருடைய அன்பு மேன்மேலும் பெருகுவதற்கு
ஹேதுவாகுமேயல்லது தோஷ நிரூபணங்களினால் அபூர்வமாக எதுவும் ஸித்திக்கமாட்டா தென்பது
திண்ணம்.
இவ்வுலகில் பிறக்கின்றவர்கள் யாவரும் தோஷமே
நிரம்பியவர்கள் என்றாவது, குணமே நிரம்பியவர்கள் என்றாவது யாரும்
சொல்லமுடியாது. உயர்ந்த பதவியில் இருக்கின்ற மஹான்கள் முதற்கொண்டு மிகவும்
தாழ்ந்திருப்பவர்கள் வரையில் யாரை யெடுத்துக்கொண்டாலும் ஒவ்வொருவரிடத்திலும்
குணங்களும் தோஷங்களும் கலந்திருக்குமேயல்லது பரிபூர்ண குணசாலியாகவும் பரிபூர்ண
துஷ்டனாகவும் ஒரு மனிதனையும் காட்டமுடியாது.
எவரும் அயலாரை வஞ்சித்து விடலாமானாலும்
தம்முடைய ஆத்துமாவைத் தாம் வஞ்சித்து விடமுடியாதாதலால் தம் தம்மிடத்திலுள்ள குண
தோஷங்களை உள்ளபடி அவரவர்கள் கட்டாயம் அறிந்தேயிருப்பார்கள். அப்படியறிந்திருந்தும், உள்ள
குணங்களை மிகவும் அதிகப்படுத்திக் காட்டுவதற்கும், உள்ள
தோஷங்களை அடியோடு மறைத்துக்கொள்வதற்குமே ஒவ்வொருவரும் முயற்சி செய்வது வழக்கம். அதில்
ஸாமான்ய ஜனங்கள் ஏமாந்து போய்விடுவதும் நிபுணர்கள் உண்மையை அறிந்து கொள்வதும்
உண்டு.
பொதுவில் ஒவ்வொருவருடைய நோக்கமும்
எப்படிப்பட்டதென்றால் ‘நம்மிடத்தில் எல்லாருக்கும் நல்ல மதிப்பு உண்டாகவேணும்; நம்மை
நல்ல குணசாலியென்றே எல்லாரும் கொள்ளவேண்டும்; நம்மிடத்தில்
தீமையிருப்பதாக யாரும் கருதக்கூடாது’ என்றே ஆசை கொண்டு அதற்கு ஏற்றாற்போல்
நடந்துகொள்வதிலேயே பெரும்பாலும் ஜனங்களின் நோக்கம் காண்கிறது.
ஞானம், செல்வம், அழகு
முதலானவை மிகச் சிறிதளவு இருந்தாலும் அவற்றை மிகவும் அதிகமாகவே காட்டிக்கொள்ள விரும்புவாரும்
உண்டு. அவை அதிகமாகவே யிருந்து அவற்றை டம்பமாகக் காட்டிக்கொள்ள
விரும்பாமல் வெகு அடக்கத்தோடு இருப்பவர்களும் உண்டு. சிலபேர்கள்
தங்களுடைய நிலைமையை நன்றாகத் தெரிந்துகொண்டு ‘நாம்
எப்படி குற்றங்களுக்குக் கொள்கலமாக இருக்கிறோமோ இப்படித்தான் உலகில் பலரும் இருக்க
நேரிடும்; இவ்வுலகுக்கு இது ஆச்சரியமன்று; ஆதலால்
பிறருடைய குற்றங்களைப்பற்றி நாம் கவனிப்பது வேண்டா’ என்றுகொண்டு
பிறரது குற்றங்களில் சிறிதும் புத்தியைச் செலுத்தாமல் தங்கள் காரியத்தோடே
நிற்பர்கள். இப்படிப்பட்ட அதிகாரிகள் அதிகமாகத் தேறமாட்டார்கள். நூற்றில்
ஒருவர் தேறினால் விசேஷம். தொண்ணூற்றொன்பது பேர்களின் இயல்வு
எப்படிப்பட்டதென்றால் தம்முடைய நிலைமையைத் தாம் அடியோடு மறந்து எப்போதும்
பிறரைப்பற்றிய பழிப்புரையே போதுபோக்காக இருப்பதாம் – அன்னவர்கள்
வாய்கொண்டு பேசத்தொடங்கினாலும் கை கொண்டு எழுதத்தொடங்கினாலும், இன்னாரைப்பற்றி
இன்னவிதமாகத்தான் பேசுவார்கள் எழுதுவார்கள் என்கிற வரம்பு சிறிதும் இராது. ஒன்றுமறியாத
மூடர்களை உயரத்தூக்கி வைத்திடவும் புகழ்பெற்ற பெரியோர்களைப் பாதாளத்திலே
தள்ளிவிடவும் அவர்கள் வல்லமை வாய்ந்தவர்கள்.
இந்த இயல்வு
நேற்று இன்று ஏற்பட்டதன்று. ஸ்ரீராமக்ருஷ்ணாதி அவதார காலங்களிலும், ஸ்ரீமந்
நாதயாமுந யதிவராதி ஆசாரியர்களின் காலங்களிலுமே இப்படிப்பட்ட அதிகாரிகள் மிகவும்
மலிந்திருந்தார்களென்றால் இக்காலத்தில் இருக்கக் கேட்கவேணுமோ? இப்படிப்பட்டவர்கள்
நிறைந்திருப்பது இந்த லீலா விபூதிக்கே ஒரு அழகு. அவர்கள் விஷயத்தில்
யாரும் வெறுப்புக்கொள்ளலாகாது. உலகுக்கு மாஹோபகாரம் செய்பவர்களாகவே அவர்களைக்
கருதுதல் வேண்டும்.
நான்காம் அதிகாரம்
‘நம்மை யாரும் பூஷிக்கவேணுமேதவிர ஒருவரும் நம்மை
தூஷிக்கக்கூடாது’ என்று விரும்பி, பூஷணைகளையே ஆவலுடன் எதிர்பார்ப்பதும் தூஷணைகள்
வருங்கால் மிகவும் வருந்துவதும் சிலருடைய இயல்வாதலால் அதைப் பற்றியும் இங்கு நாம்
முக்கியமாகச் சில சொல்ல விரும்புகிறோம்.
தூஷிக்கவேண்டிய காரணம் பூர்த்தியாக இருந்தாலுங்
கூட தூஷிக்கும் வழியைக் கனவிலுமறியாமல் பூஷிப்பதே செய்வார் சிலர். பூஷிக்கவேண்டிய
காரணம் பூர்த்தியாக இருந்தாலுங்கூட தூஷிப்பதையே தொழிலாகக் கொள்வர் பலர்; எங்கும்
தூஷிப்பவர்கள், பலபல மஹான்களால் கொண்டாடப் படுகின்றவர்களைத்தான்
தூஷிப்பார்கள். யோக்யதை யில்லாதவர்களை தூஷிப்பதனால் எப்படி
த்ருப்தியுண்டாகும்? அதை யார் கவனிப்பார்கள்? அது
பயனற்ற பணியாகுமே. நிறையப் பழங்கள் பழுத்துத் தொங்கப்பெற்ற மரங்களின்மீது
கல்லடி தடியடி விழுமேயல்லது மொட்டை மரத்தையும் மலட்டு மரத்தையும் அடிப்பாரார்? அதுபோல், ஞானானுட்டானங்கள்
நிரம்பியும், பலவகைகளில் புகழ்பெற்றும், பலரால்
வணங்கப்பட்டும் விளங்குகின்ற மஹான்கள் பேரில்தான் தூஷணைகள் ஏற்படுமேயல்லது, ‘யாரோ
வழிப்போக்கன்’ என்னும்படியான ஸாமான்ய ஜனத்தின் மீது பைத்தியக்காரன்கூட
தூஷணைகள் செய்ய மனங்கொள்ளமாட்டான்.
ஆகவே, எந்த நபரின்மீது விசேஷ தூஷணைகள் ஏற்படுகின்றனவோ
அதுவே காரணமாக அந்த நபர் மிக்க பெருமை வாய்ந்தவர் என்பது உறுதியாகும். உண்மையில்
அவர் பெருமை வாய்ந்தவராக இல்லாவிடினும், தூஷணைகள் ஏற்படுவது காரணமாகவே அவர்க்குச்
சிறந்த பெருமை அவசியம் ஒப்புக்கொள்ள வேண்டியதே. அமுதனார்
அருளிய இராமானுச நூற்றந்தாதியில் “பழிக்கில் புகழ்” என்றொரு
வாசகம் இருப்பது பிரசித்தமே. அதன் பொருளையே இங்கு நாம் விவரித்தோம்.
மஹான்களைப் பிறர் தூஷிப்பதானது உண்மையில்
பூஷிப்பதாகவே முடிவுபெறும். அவர்களுடைய கீர்த்தி எங்கும் நன்றாகப்
பரவுவதற்கு தூஷணைகளே பெரிய கருவியாகும். பூஷிப்பது ஒருமூலையில் அடங்கிப்போகும். தூஷிப்பதுதான்
உலக மெல்லாம் பரவும். பாகவத தூஷணையாக ஒரு புத்தகம் வெளிவந்தால் அது எத்தனை
பக்கமாயிருந்தாலும் எவ்வளவு வேலையிருந்தாலும் விட்டிட்டு வெகு ரஸமாக வாசிக்க
ருசியுண்டாகும். ‘மெய்ஞ்ஞான விளக்கம்’ என்று
ஒன்று வெளிவந்தால் அது நாலே பக்கமாயிருந்தாலும் வாசிக்கத் தொடங்கும்போதே
கண்ணுறக்கமதாகும். உலகப்போக்கு இது. ஓரிடத்தில் இருவர்கூடி ஒருமஹானைப்பற்றிப்
புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தால் அங்கு மூன்றாவது நபர் வந்துசேருவது மிகவும் அரிது. அதுவே ஒரு
மஹானைப்பற்றி தூஷிக்குமிடமாயிருந்தால் நாலுநிமிஷத்தில் நானூறுபேர்கள் கூடிப்
பிரளயமாகும். இயற்கையாகவே ஸகலஜனங்களுக்கும் பரதூஷணைகள் செய்வதிலும்
அவற்றை ஆதரவோடு கேட்பதிலுமே விருப்பம் செல்லும். இவ்வியல்வுக்குத்
தப்பிப் பிழைப்பவர் யாரோ சிலர். ஸ்ரீராமாயண கதைகளில் ஒரு சிறிதும் தெரிந்து
கொள்ளாதவர்களும் ‘ராமன் வாலிவதம் செய்தது மிகவும் தப்புத்தான்’ என்று
தூஷியாமலிருப்பதில்லை. ஸ்ரீபாகவதம் ஸ்ரீவிஷ்ணுபுராணம் ஹரிவம்சம் முதலானவற்றில்
ஒருவரியும் காணாதவர்களும் கேளாதவர்களுங்கூட ‘கிருஷ்ணன்
கோபியர்களோடு விளையாடினது மிகவும் பிசகுதான்’ என்று
தாராளமாகத் தூஷித்தே தீருவர்கள். [அங்ஙனம் தூஷிப்பவர்களிடத்தில்தான் பகவானுக்கு
மிகவும் உகப்பு என்று நூல்கள் முறையிடுகின்றன.]
ஸ்ரீராமபிரானுடைய பெருமைகலை விளக்கினது யார்? என்று
கேட்டால், இராவணன் என்றுதான் விடைகூறுவார்கள். கண்ணபிரானுடைய
பெருமைகளை விலக்கினது யார்? என்று கேட்டால் கம்ஸன், சிசுபாலன்
என்றுதான் விடைகூறுவார்கள். இத்தகைய பெரும் பாக்கியம் ராவண
சிசுபாலாதிகளுக்குத் தவிர லக்ஷ்மணன், மாருதி, விபீஷணன்
போல்வாருக்கும் நேரவில்லை. இவ்வுலகம் நீடூழி வாழ்வதற்கே ராவண
சிசுபாலாதிகள் காரணமாயினர். கூரத்தாழ்வானுக்குப் பெருமை விளைத்தவர்
நாலூரான். நம்பிள்ளைக்குப் பெருமை விளைத்தவர் துன்னுபுகழ்க் கந்தாடைத்
தோழப்பர். இப்படியே ஒவ்வொரு மஹானுடைய பெருமையையும் விளக்குதற்கு
அவ்வக்காலங்களில் பலபல பெருந்தகையாளர் தோன்றிக்கொண்டே வருகின்றனர்.
அவர்கள் செய்யும்
தூஷணைப் பிரசாரங்களைக் கண்டு சிலபேர்கள் வெறுப்பதும் வருந்துவதும் மிகவும் பிசகு. எந்த
மஹானைப்பற்றித் தூஷணைகள் ஏற்படுகின்றனவோ, அந்த மஹான் சிறிதும் வருந்தமாட்டார். வெறுக்கமாட்டார். ஆனந்தம்! பரமானந்தம்!! என்றே
உண்மையாக உள்ளங்கனிந்திருப்பர்.
சொல்லுகின்ற (அல்லது) எழுதுகின்ற
நிந்தனைகள் யாவும் இவ்வுலகத்தவர்க்கு ஸம்பாவிதமேயல்லது அஸம்பாவிதமல்லவே. உள்ள
தோஷங்களை யெடுத்துக் கூறுவார்களேயல்லது இல்லாத தோஷங்களை ஒருநாளும் ஒருவரும்
எடுத்துக்கூறார். ஐயோ! நம்முடைய தோஷங்கள் பிறர்க்குத் தெரிந்து
விட்டனவே! என்று வருந்தலாகாது. ‘நாம்
மறந்தும் மறைத்தும் இருந்த தோஷங்களை தெய்வாதீனமாக வெளிப்படுத்தி நமக்கு
நன்மையுண்டாகும்படி மஹோபகாரம் செய்தார்களே!’ என்று
உள்ளூறக் களிக்க வேணும்.
ஐந்தாம் அதிகாரம்
நாம் நம்முடைய
தோஷங்களையே எப்போது அநுஸந்தானம் செய்து கொண்டிருக்கவேணுமென்று பெரியாரிடம் கேட்டு
அறிந்திருந்தும் அதை மறந்து, நம்மிடத்தில் இல்லாத குணங்களையே நாம்
வெளியிட்டுக்கொண்டும் குற்றங்கலை மறைத்துக்கொண்டும் தவறுதலாகப் போது போக்கி
வருகிறோம். இந்நிலைமையில், நமது குற்றங்குறைகளை உண்மையாகச் சிலர் எடுத்து
வெளியிட்டால் இதனில் விஞ்சிய மஹோபகாரம் வேறு என்ன வுளது? அவர்கட்கு
*பொன்னுலகாளீரோ புவனிமுழு தாளீரோ* என்று உபயவிபூதியையும் பரிசளித்தாலும் போதாதே. சிகித்ஸை
செய்பவர்கள் தற்காலத்தில் நமக்கு எவ்வளவோ கொடுமையை விளைத்தாலும் அதை நாம்
நன்மையாகவேகொண்டு நூறுமாயிரமும் பரிசளிப்பது போலவே இந்த நிந்தனை நிபுணர்களுக்கும்
வாஸ்தவமாய் எவ்வளவோ பரிசளிக்கவேண்டுமே.
“யதாசக்தி நிக்ருஹ்ணீயாத் தேவதா குரு நிந்தகாந்” என்றதும்
ஸாமாந்ய சாஸ்த்ரமே. விசேஷ சாஸ்திரங்களின் உபதேசம் எப்படிப்பட்டதெனில்; நிந்தனை
செய்வாரை நிச்சலும் பூஜிக்க வேணுமென்பதேயாம். பூஜிக்க
ஸௌகரியப்படாவிடினும், அவர்கள் செய்யும் நிந்தனைப் பிரசாரங்கலைத் தீமையாகக்
கொள்ளாமல் நன்மையாகக் கொண்டு நெஞ்சில் உபகாரஸ்மிருதி நடந்தால் அவ்வளவே போதுமானது.
நம்மைப்பற்றிப்
பிறர் செய்வது தூஷணையே யானாலும் அது நமக்கு எவ்வளவு நன்மை பயக்கின்ற தென்பதை ஊன்றி
கவனிக்கவேணும்.
ஒரு மூலையிலிருக்கின்ற நம்மைப் பலபேர்கள் திருவுள்ளத்திற் கொள்ளும்படி
செய்கிறார்களே யென்று மகிழவேண்டும். வாயால் தூஷித்து விடுவதோடு நில்லாமல் பத்திரிகைகள்
மூலமாகவும் நிந்தனைகளைப் பரவச் செய்பவர்கள் பக்கலில் நாம் வஹிக்கவேண்டிய
உபகாரஸ்மிருதிக்கு அளவே கிடையாது.
‘வஸிஷ்டஸ்
ஸமாநாநாம் பவதி’
என்று வேத்புருஷன் அநுக்ரஹித்த கட்டளையிலே சிலர் ஸஜாதீயர்களுக்குள்ளே
மேம்பட்டு யாவரும் வந்தடி வணங்கி நிற்க நேர்ந்தால் அது கண்டு பொறுத்திருப்பதென்பது
எளிதான காரியமோ?
எப்படி பொறுத்திருக்க முடியும்? ஒரு நாளும் பொறுத்திருக்க முடியாது. *பரகீய
யசோக்நிதஹ்யமாநா*
என்கிற ச்லோகம் ப்ரஸித்தமன்றோ. பிறர்க்கு ஒரு கீர்த்தியுண்டானால் அது பெரிய காட்டுத்
தீயன்றோ; அதனால்
கதுவப்படாமல் யாரால் வாழமுடியும். இதையெழுதுகிற நம்மோடு பிறரோடு வாசியற உலகம்முழுவதும்
பெரும்பாலும் பொறாமைக்கு இருப்பிடமே. ஸ்ரீபெரும்பூதூரில் கீர்த்தி மூர்த்தியான குண்டலம் ஸ்வாமி
யென்றும் மற்றொரு ஊரில் மற்றொரு ஸ்வாமி யென்றும் சொல்லப்படுகிற யாரோ சில மஹான்கள்
இந்நிலத்தில் தப்பிப் பிறந்தவர்கள். நம்போன்ற பூரியர், ‘பக்கத்தகத்துக்காரர் வாழ்ந்தால் பத்து பட்டினி’ எங்கிற
பழமொழியின்படி யன்றோ பொறாமையே வடிவெடுத்துப் பிறந்திருப்பது. பெருமை
பெற்றவர்களென்று விளங்கும் பெரியாருடைய பெருமைகட்குக் குறைபாடு விளைக்க வேணுமென்று
கருதியும், இன்னம்
எவ்வளவோ ஆச்சரியமான எண்ணங்கள் கொண்டும், ஸதாகாலமும் இதுவே ஞாபகமாய், இரவும் பகலும்
வேறொரு வேலையுமின்றிக்கே, பெரியகோட்டை பிடிப்பவராகவும், உலகையே தம்
கைப்படுத்துவாராகவும்,
ஸகலஸித்தியும் பெறுவாராகவும் எண்ணி, நித்தியமும் வீதிகள்தோறும் திண்ணைகள்தோறும் குழாங்கூடி
தூஷணைகள் வழங்கி வருகிறார்களல்லவா? இக்காரியத்தை அவர்கள் எந்த எண்ணத்தோடு செய்கிறார்களென்பதைப்
பற்றி நாம் கவனிக்கத் தேவையில்லை. அவர்களது எண்ணம் எதுவாயினுமாகுக. இக்காரியம்
அவர்களுக்குச் சிறந்த நன்மையையே தரக்கூடிய தென்பதில் சந்தேகமில்லை. மேன்மேலும்
அவர்கள் இதில் நல்ல உற்சாகத்தோடும் விடாமுயற்சி யோடும் இருந்து வரும்படிக்குப்
பக்த வர்க்கங்கள் யாவரும் காப்பிடக் கடமைப்பட்டவர்கள்.
ஐயோ! அவர்கள் செய்வது
தூஷணையல்லவோ என்று யாரும் நினைக்கலாகாது, இகழலாகாது, வருந்தலாகாது, பிரதி செய்ய நினைக்கலாகாது. நாம் நூற்றுக்கணக்காகப்
பணம்கொடுத்துச் சேவகர்களை நியமித்தாலும் இவ்வளவு நலமான காரியம் நடைபெறாது. ஒருவ்யக்தியின்
திருநாமத்தை ஆங்காங்கு மூலைமுடுக்குகளிலுள்ளவர்களும் பல பேர்களாகக் குழாங்கூடிச்
சிந்தனை செய்யும்படியாகப் பெருமுயற்சி செய்து வருகின்ற பேரியார்கட்கு நித்யஸ்ரீர்
நித்யமங்களமென்று பல்லாண்டு பாடுவதே பாங்காகும்.
ஸங்கல்பஸூர்யோத என்கிற
நாடகம் தேசிகர் பணித்ததென்று ப்ரஸித்தமே. அதில் ஐந்தாவது அங்கத்தில் அஸூயாதேவியென்பவள் வந்து கூறுகிற
வார்த்தையை ஆசிரியர் அழகாக எடுத்து இயம்பியுள்ளார். விவேக
சக்ரவர்த்திக்கு மஹாமோஹ மஹாராஜன் பகைவன்; இவனுடைய மனைவிக்கு
துர்மதி யென்று பெயர்; அவளுடைய தோழிதான் அஸுயை யென்பவள். அவள் கூறுகின்றாள்
- *மயி
தத்தாவதாநாயாம் விச்வதோஷாபஹாரிணா, ந சக்ய மீச்வரேணாபி நிரவத்யேந வர்த்திதும்* என்று. (இதன் பொருள்) {‘அஸூயை யென்கிற) நான் உஷாராக
இருந்தேனாகில் ஒன்றான ஸர்வாஶ்வரனாலும் குற்றங்களிலிருந்து தபிப் பிழைக்க முடியாது
என்பதாம். இதற்கு
மேல் "நிரவதி குணக்ராமே
ராமே" என்று தொடங்கி அருமையான் ஶ்லோகமொன்று அந்த அஸூயா தேவியினால்
சொல்லப்பட்டுள்ளது: (அதன் கருத்து) குற்றம் என்பது லவலேசமும் காணமுடியாமலும், அநந்த கல்யாண குணஸமூஹமே
வடிவெடுத்துமிருந்த ஸ்ரீராமபிரானிடத்திலும் நாளைக்கும் பலவகைக் குற்றங்களைக் கூசாமல்
கூறி வருகின்ற இவ்வுலகத்தவர், மற்றையோரிடத்தில் எப்படி வெறுமனே யிருப்பார்கள்? குணக்கடலான எம்பெருமானே
படுகிறபாடு அதுவானால் ஏதோ ஒன்றிரண்டு குணங்களையும் பல்லாயிரக்கணக்கான குற்றங்களை யுமுடைய
மற்றையோர் எப்பாடுபடவேண்டும்! – என்பதாம்.
ஸ்ரீவசனபூஷணத்தில்
அருளிச் செய்திருப்பவைகளும் ப்ரஸித்தம். (குற்றம் செய்தவர்கள் பக்கல் பொறையும், க்ருபையும், சிரிப்பும், உகப்பும், உபகார ஸ்ம்ருதியும்
நடக்க வேணும்; முதலியவை.)
மஹான்களின் இத்தகைய அமுதமொழிகள் நம்போல்வாரான புல்லியர்களின் அனுஷ்டானத்திற்கு வருவது
மிகவும் அரிது. ச்ரமப்பட்டு அனுட்டானத்திற்குக் கொண்டு வந்து விட்டால் ஆனந்தம் பரமானந்தமே.
பிறர் செய்யும் தூஷணைகளினால் யார்க்கு என்ன நஷ்டமுண்டாகுமென்பதொன்றையே விவேகிகள் கவனிக்க
வேண்டும். ஆமுஷ்மிகத்தில் எவ்வித நஷ்டத்தையும் இவர்களால் உண்டு பண்ணமுடியாது. ஐஹிகத்தில்
ஏதேனும் சிறிது நஷ்டம் உண்டு பண்ண முடியும் என்றே வைத்துக் கொண்டாலும் அந்த நஷ்டத்தையே
பரமலாபமாக நினைப்பது எவ்வளவோ நன்மை. இதைத்தான் ஸ்ரீவசனபூஷண வியாக்கியானத்தில் மணவாளமாமுனிகள்
வெகு அழகாக நிரூபித்தருளுகிறார். அந்த ஆசாரியர்களை நாம் உள்ளபடி வழிபடுகின்றவர்களாக
இருப்போமானால்,
அவர்களுடைய உபதேச மொழிகளை மெய்யன்புடன் நாம் அனுட்டானத்திற் கொண்டுவர அசக்தர்களாயினும்
"பொய்யே கைம்மை சொல்லி" என்று ஆழ்வார் அருளிச் செய்த வழியில் கபடமாக வாகிலும்
அநுசரிக்க ஆசைப்படுவோமானால் "மெய்யே பெற்றொழிந்தேன்" என்னும்படியாக உண்மையான
பலனைப் பெற்றே தீருவோம்.
ஆறாம் அதிகாரம்
நாம்
பெருமாள் ஸன்னிதிக்குச் சென்று பெருமாளைப் பரமபக்தியுடன் ஸேவிப்பது தியானிப்பது
கைங்கரியங்கள் செய்வதாகிய இவையெல்லாம் எதனால் நடக்கிறதென்றால் அந்தப் பெருமாள் நம்
கண்ணுக்குப் புலப்படாமலும் பேசாமலும் நாமிட்டது சட்டமாக இருப்பதனாலேயே. அவர்
விபவாவதாரங்களில்போலே கண்காண நின்று காதாரப் பேசித் தம்முடைய ஜ்ஞானசக்திகளைக்
காட்டிக் கொண்டிருந்தாராகில் அவரையும் நாம் தூஷிக்கவே தலைப்படுவோம். இதில்
ஸந்தேஹமுண்டோ? இதைத்தான்
ஸ்ரீவசநபூஷணத்தில் “கண்காண
நிற்கில் ஆணையிட்டு விலக்குவர்களென்று கண்ணுக்குத் தோற்றாதபடி நின்று” என்கிற
அத்புதஸூக்தியினால் அருளிச் செய்தார்.
சிலர்
ராமானுஜர் ராமானுஜர் என்றும், சிலர் நம்பிள்ளை நம்பிள்ளையென்றும், சிலர் தேசிகன்
தேசிகனென்றும்,
சிலர் மணவாளமாமுனிகள் மணவாளமாமுனிக ளென்றும் இப்படி வாய் வெருவுவதெல்லாம்
தெய்வாதீனமாய் அவ்வாசாரியர்கள் இந்நிலத்தை விட்டுத் திருநாடு சென்று
சேர்ந்தபடியாலே –
என்பதையும் திண்ணமாக உணரவேண்டும். அவ்வாசாரியர்கள் ஜீவித்திருந்த காலத்தில் இந்த நாமும்
பிறந்துதானிருந்தோம்;
அப்போது அவர்களை தூஷித்துக்கொண்டும் பலவாறு பரிபவித்துக்கொண்டும்
போதைப்போக்கினோம்.
அந்த நாமே இப்போது ஸ்வாமி ஸ்வாமியென்று குழைவதற்கு என்ன காரணமென்றால் – அவர்களுடைய
உண்மையான அப்ரதிம யோக்யதைகளை யறிந்து நெஞ்சு கனிந்திருப்பார் யாரோ சில மஹான்கள்
இந்தளத்திலே தாமரை பூத்தாற் போன்றவர்கள் இருக்கட்டும். பெரும்பான்மையோர்கள்
அவர்களைப் போற்றுவதெல்லாம் “அவர்கள் எப்றைக்கோ மறைந்துபோனவர்கள்தானே; அவர்களைக்
கொண்டாடுவதனால் நமக்கென்ன நஷ்டம்” என்கிற இந்த ஒரே யெண்ணங் கொண்டுதான். யோக்யதையை யறிந்து
உகப்பவர்களாயும் பொறாமையற்றவர்களாயு மிருந்தால் அவர்களுடைய போதுபோக்கு
எப்படியிருக்குமென்பதை நாம் சொல்ல வேணுமோ? “பிறர்மினுக்கம்
பொறாமையில்லாப் பெருமையும் பெற்றோமே” என்றருளிச் செய்தவர் மணவாளமாமுனிகளொருவரே யல்லாது
மற்றொருவருமல்லரே.
முமுக்ஷுப்படியில்
த்வயப்ரகரணத் தொடக்கத்தில் “புறம்புண்டானபற்றுக்களை யடைய வாஸனையோடே விடுகையும்” என்று ஆரம்பித்து
வைஷ்ணவாதிகாரிக்கு அவஶ்யாபேக்ஷிதங்களான பத்து விஷயங்களைப் பிள்ளை லோகாசாரியர்
அருளிச் செய்கிறார்.
அவற்றுள் “இப்படி
யிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களேற்ற மறிந்து உகந்திருக் கையும்” என்பதுமொன்றுள்ளது. அங்கு வியாக்கியான
மருளிச்செய்யா நின்ற மணவாளமாமுனிகள் - இது ஒன்று தவிர மற்றதெல்லாம்
எளிதாக உண்டானாலுமுண் டாகக் கூடும்; இது ஒன்று இந்நிலத்தில் உண்டாவது அரிதே – என்று கண்ணீர்ப்
பெருக்குடன் அருளிச் செய்திருக்கக் காண்கிறோம். மூலத்திற்கு
வியாக்கியான மருள்வதற்கு மேற்பட ஒரு அக்ஷரமும் எழுதுகிற வழக்கமில்லாத மாமுனிகளன்றோ
பரவசமாக இங்கு இங்ஙனமெழுத நேர்ந்தது. பரமாசார்யர்கள் அவதரித்திருந்த நல்லடிக்காலமாகிய
அக்காலத்திலே, இப்படி
எழுதியருள நேர்ந்ததென்றால் இக்காலத்திற்குச் சொல்லவேணுமோ?
அஸூயையை
வெல்வதென்பது ஆராலுமாகாது. “மற்றுமொருத்தருமிப் பிறவியென்னும் நோய்க்கு
மருந்தறிவாருமில்லை”
என்று பெரியாழ்வார் ஸாதித்தார்; அந்த மருந்து அறிவார் இருந்தாலும் இருக்கக்கூடும்; பொறாமையென்னும்
நோய்க்கு மருந்தறிவாராருமில்லை யென்பதே ஸத்யம். யோக்யதையுண்டாவதென்பது
தனிப்பட்ட ஒரு அத்ருஷ்ட விசேஷம். அஃதில்லாதவர்கள் அஃதுடையாரிடத்திலே பொறாமைப்பட்டுத்
தீரவேண்டியது தலைவிதியாகிறது. ஒரு சிறு விஷயம் பாருங்கள்; ஒரு ஸன்னதியில்
வெள்ளிக்கிழமைதோறும் தாயார் புறப்பாடு நடக்கிறது. அப்போது தவறாமல்
சிறிய திருமடல் ஸேவையாகிறது. அந்த கோஷ்டியில் ஐம்பது அறுபது வருஷகாலமாகச் சிலர் தவறாது
முன்னணியில் நின்று கம்பீரமாகக் காட்சி தருகிறார்கள். கோஷ்டீ நிர்வாஹபாவனையும்
கொள்ளுகிறார்கள்.
“கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி சொல்லும்” என்ற கணக்கிலே
மதிளும் மரமுங்கூட அந்தத் திருமடலைச் சொல்லிவிடக் கூடும்; ஆனால் முன் சொன்ன
கம்பீர ஸ்வாமிகளின் திருவாக்கிலோ ஒரு அக்ஷரமும் வரமாட்டேனென்கிறது. குதிரை
புரீஷவிஸர்ஜனம் செய்யும்போது அதன் ஆஸனம் படுகிறபாடு படுகிறதாயிற்று அவர்களின்
சோதிவாய். அப்படிப்பட்டவர்கள்
பல கலைகளிலும் ஒப்புமுயர்வுமற்ற யோக்யதைபெற்ற பாக்யசாலிகளைக் கண்டால் “என்ன நோன்பு
நோற்றாள்கொலோ! இவரைப்பெற்ற
வயிறுடையாள்” என்று
கொண்டாட மனமில்லையானாலும் அரிய பெரிய யோக்யதை பெற்ற மஹான்களென்று
மனத்திற்குள்ளேயாவது மகிழ்ந்திருக்க முடியாமற்போனாலும் அவர்களைப்பற்றி ஒன்றும்
நினையாதே – உகப்பு
வெறுப்பு இரண்டுமின்றிக்கே உதாஸீநபாவமாவது வஹிக்கலாமே; அந்தோ! தமக்குள்ள சக்தி
முழுவதையும் அப்பெரியார்களுடைய நிந்தையாகிற அஸஹ்யாபராதத்திலேயே செலுத்தி
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் இப்படியே நிரக்ஷரகுக்ஷிகளாய் ஜனிக்கவே
க்ருஷிபண்ணிப்போருகிறார்களே! என்று ப்ராதஸ் ஸ்மரணீய திவ்ய கீர்த்தி மூர்த்தியான
அஸ்மதுபாத்யாய சரண ஸ்ரீமாம்பள்ளம் ஸ்வாமி அடிக்கடி ஸாதிக்கக் கேட்டதுண்டு. *ஸ்வபாவோதுரதிக்ரம:* என்று கொண்டு
இப்படிப்பட்ட அஸஹ்யாபசாரிகளை நெஞ்சாலும் இட்டெண்ணாமலிருக்க வேண்டுமே தவிர நொந்து பயனில்லை
யென்பர் சில மஹான்கள்.
“தண்டேன்
நுகரா மண்டூகம் தண்டாமரையினுடன் பிறந்தே, வண்டே கானத்திடைப்பிறந்தும் வந்தே கமலமது வுண்ணும், அண்டே
பழகியிருந்தாலும் அறியார் பொல்லோர் நல்லோரைக், கண்டேகளிப்பருறவாடிக்
கற்றோர் நல்லோர் பெற்றக்கால்” என்கிற செய்யுளொன்றையாவது சிந்தனை செய்து போதுபோக்கலாம்
அவர்கள்; எவர்கள்? நல்ல வழியில்
போதுபோக்க யோக்யதை ஸம்பாதிக்க பாக்கியமற்றவர்கள்.
உபஸம்ஹாரம்
நமது போது நல்ல போதாகக் கழியவேணுமென்கிற
நினைவுடையவர்கள் கீழ்க்கண்ட பத்து விஷயங்களை அடிக்கடி சிந்திக்கவேணும்; கூடியவரையில்
அனுஷ்டானத்தில் கொண்டுவர முயலவேண்டும்.
1.
அஹங்காரம் எல்லாப்படியாலும் ஸ்வரூபத்தைக்
கெடுக்கவல்லதாகையாலே அது கழியும் வழி யென்னவென்று சிந்திக்கவேணும்.
2.
அந்த அஹங்காரத்தை வளரச்செய்கிற தீயாரோடு ஸஹவாஸத்தை
யொழிக்கவேணும்.
3.
அஹங்காரம் முதலிய பலகுற்றங்களை உபதேசம் முதலியவற்றால்
போக்கவல்லவர்களான மஹான்களை தேஹபந்துக்களாகவும் ஆத்மபந்துக்க ளாகவும் ஸகலவித
பந்துக்களாகவும் நினைத்து அவர்களையே உசாத்துணை யாகக் கொள்ளவேணும்.
4.
ஞானபக்தி விரக்திகள் மலிந்த மஹான்களைக் கண்டால் நிலாத்தென்றல்
சந்தனம் புஷ்பம் முதலியன கண்டாற்போலே நெஞ்சு குளிர்ந்திருக்க வேணும்.
5.
அஹங்காரத்தினுடையவும், அர்த்தகாமங்களினுடையவும்
கெடுதல்களை அநவரதம் சிந்திக்கவேணும். சமதமாதி குணங்கள் வளரும்வழி பார்க்க வேணும்.
6.
பகவத்குணாநுபவத்திலும் பூர்வாசார்ய ப்ரபாவ அநுஸந்தானத்திலுமே
அதிக காலம் கழியும்படி நோக்க வேணும்.
7.
விலக்ஷணர்களுடைய ஞானமும் அனுட்டானமும் நமக்கு உண்டாகவேணு
மென்று ஆசைப்படவேணும்.
8.
ஜ்ஞானுஷ்டானங்களை வளர்க்கவல்ல ஸத்துக்களை ஒருநொடிப்பொழுதும்
விட்டுப்பிரியாமலும்,
ஸ்வரூபத்தைக் கெடுக்கவல்ல நீசர்களைக் கண்ணெ டுத்துப்பாராமலும் இருக்குமிருப்பை
அருளவேணுமென்று அநவரதம் பகவானைப் பிரார்த்திக்க வேணும்.
9.
பிறரிடத்தில் மலைமலையான தோஷங்களிருந்தாலும் அவற்றில் கண்
செலுத்தாமலும் குணலேசங்களையே மலையாகக்கொண்டு உகந்திருப்பதும், தோஷங்களே
வடிவெடுத்திருக்கின்ற நமக்கு ஒரு குணமுமில்லையே யென்று நொந்திருப்பதும் நித்யமாகச்
செல்லவேணும்.
10. பிறரிடத்தில்
தோஷங்களைப் பேசுவதானது நிர்மலமான ஆகாசத்திலே சேற்றைவாரி யெறியுமவன் செய்கைபோலே
யாகுமத்தனையென்று திண்ணமாகக் கொண்டு, அஸூயையையும் அஹங்காரத்தையும் அறவே யொழித்தாலன்றி நாம் உய்ய
விரகில்லையென்று துணிந்திருக்கவேணும். ஆக இவ்விஷயங்களை நிச்சலும் நெஞ்சிற்
கொண்டிருப்பார்க்கு இங்குமங்கு மெங்குமின்பமாகுமே.
சேமம் செங்கோனருளே.
ஸ்ரீகாஞ்சீ
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர்
எழுதிய
நற்போதுபோக்கு
முற்றிற்று
No comments:
Post a Comment