Saturday, 17 November 2018

அர்ச்சிராதி₃


ஸ்ரீ பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த
அர்ச்சிராதி

தனியன்
லோகாசார்யாயகுரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே
ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம:

போர்மண்டலஞ்சங்கு தண்டுவில்வாள்புக ராழிவெய்யோன்
கார்மண்டலஞ்சென்று காண்பார்தமக்குக் கதிரோளியோன்
ஏர்மண்டலந்தன்னை யெய்தும்வழியை யினிதுரைத்தான்
பேர்மண்டலகுரு வென்னு முடும்பை பிறந்தவனே.

ப்ரதமப்ரகரணம்

ஸ்ரீய:பதியான ஸர்வேஶ்வரனுக்கு விபூதித்வயமும் ஶேஷமாயிருக்கும். அதில் போ விபூதியிலுள்ளார் ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப என்கிறபடியே அவனுடைய செங்கோலே ஏகாதபத்ரமாக நடக்கும்படி அவனுடைய அபிமாநத்திலே அந்தர்பவித்துப் போருவர்கள். லீலாவிபூதியிலுள்ளார், அவர்களைப்போலே சந்தாநுவர்த்திகளன்றிக்கே ஸங்கல்பாநுவிதாயிகளாய், “நம இத்யேவ வாதிந:” என்கிறதுக்கு எதிராக ந நமேயம் ஈஶ்வரோஹம் என்கிறபடியே, மனையடையே, யானேயென்றனதே என்று, அவர்கள் பணியா அமரராயிருக்கும் இருப்புக்கெதிராக மற்றோர் தெய்வம்பாடி ஆடிப்பணிந்து”, மிக்கார் வேதவிமலர் என்கிறபடியே, அவர்களைப்போலே பெருமக்களாயிராதேசிறியார் சிவப்பட்டார் என்கிறபடியே சிறியராய், “அயர்வறும் அமரர்கள் என்கிறபடியே அவர்களைப் போலே திவ்யஜ்ஞாநோபபந்நராயிராதே அறிவிலா மனிசராய், “ஒளிக்கொண்ட சோதிக்கெதிராக அழுக்குடம்பைப் பரிக்ரஹித்து, விபந்யவ:” விண்ணோர் பரவுந்தலைமகன் என்கிறதுக்கெதிராக உலகில் கண்டவாதொண்டரைப் பாடி உனக்கே நாம் ஆட்செய்வோம் என்கிறபடியே அவனுக்கு ஆட்செய்யாதே, மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்து தொண்டுபூண்டமுதமுண்ணாதே பாவையர் வாயமுதமுண்டு, ஸ ஏகதா பவதி என்கிறதுக்கெதிராக குலந்தான் எத்தனையும் பிறந்து உருவார் சக்கரஞ்சங்கு சுமந்து இங்கவனோடு ஒருபாடுழலாதே ஆக்கையின்வழியுழன்று ஏதத் வ்ரதம் மம என்கிறவனுடைய வ்ரதத்துக்கு எதிராக ஆதானும் பற்றி நீங்கும் விரதத்தை ஏறிட்டுக் கொண்டு, “அவர்தரும் கலவியே கருதி ஓடினேன் என்கிறபடியே அலம் புரிந்த நெடுந்தடக்கைக்கும் எட்டாதபடி கைகழியவோடி, அற்பசாரங்களவை சுவைத்து அகன்று போரக் கடவராயிருப்பர்கள். இவர்கள் தண்மையைப் பார்த்துக் கைவிடாதே ஸ்வாபாவிக ஸம்பந்தமே ஹேதுவாக விடமாட்டாதே எதிர்சூழல் புக்குத் திரிகிற ஸர்வபூத ஸுஹ்ருத்தான ஸர்வேஶ்வரனுடைய யத்ந விஶேஷம் ஒருநாள்வரையிலே ஓர் அவகாஶத்திலே பலித்து, அத்வேஷாபிஸந்தியையுடையனாய், மோக்ஷஸமீக்ஷா யுக்தனாய், ப்ரவ்ருத்தமான வைராக்யனாய், விவேகாபிநிவேஶியாய், ஸதாசார்ய ஸமாஶ்ரயணம் பண்ணிச் செய்த வேள்வியனாய், ஸம்ஸாரத்தினுடைய கொடுமையை அநுஸந்தித்து, ஸர்ப்பாஸ்யகதமான மண்டூகம்போலேயும், காட்டுத்தீ கதுவின மான் பேடை போலேயும், இருபாடெரி கொள்ளியினுள் எறும்புபோலேயும், ஆவாரார் துணை யென்றலைநீர்க்கடலுள் அழுந்தும் நாவாய்போலேயும், ஆற்றத் துளங்கி, பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ” “ஐவர்திசைதிசை வலித்தெற்றுகின்றனர்” “கூறைசோறிவை தாவென்று குமைத்துப்போகார் என்று இந்த்ரியங்களினுடைய கொடுமையை நினைத்துக் கூப்பிட்டு, எண்ணாராத் துயர்விளைக்கு மிவையென்ன உலகியற்கை உயிர்மாய்தல் கண்டாற்றேன் ஒஒ உலகினதியல்வேஎன்று ஸம்ஸாரிகள் இழவுக்கு நொந்தாற்றமாட்டாதே, “பேயரே எனக்கு யாவரும் நாட்டு மானிடத்தோடு எனக்கரிதுஎன்றும் நாட்டாரோடியல்வொழிந்துஎன்றும் சொல்லுகிறபடியே, பிராட்டிக்கு ராக்ஷஸிகளோட்டை ஸஹவாஸம் அஸஹ்யமானாற் போலே, மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக்கொண்டு உண்டியேயுடையே உகந்தோடுகிற ஶௌரிசிந்தா விமுகரான ஸம்ஸாரிகளோட்டை ஸஹாவாஸம் துஸ்ஸஹமாய், “இந்நின்ற நீர்மை இனியாமுறாமை” “எங்கினித் தலைப்பெய்வன் நாளேலறியேன் வானுலகம் தெளிந்தே என்றெய்துவது தரியேன் இனி கூவிக் கொள்ளுங் காலமின்னங் குறுகாதோ என்று பகவதநுபவம் பெறாமையாலே பெருவிடாய்ப்பட்டு, தீயோடுடன் சேர்மெழுகாய், காணவாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து, காணப்பெறாமையாலே ஒருபகலாயிர மூழியாய், க்ருதக்ருத்யா: ப்ரதீக்ஷந்தே என்கிறபடியே ஆக்கைவிடும் பொழுதை மநோரதித்து மஹிஷியினுடைய உச்சிஷ்டத்தை விரும்பும் ராஜபுத்ரனைப்போலே தான் த்யஜித்த தேஹத்தை விரும்புகிற ஈஶ்வரனை மங்கவொட்டுஎன்றபேக்ஷித்து, “உண்டிட்டாயினி யுண்டொழியாய் முற்றக்கரந்தொளித்தாய் திருவாணை நின்னாணை கண்டாய் இனி நான் போகலொட்டேன் என்று தடுத்தும் வளைத்தும் பெறவேண்டும்படி பரமபக்தி தலையெடுத்தல், அவ்வளவன்றிக்கே உக்திமாத்ரத்திலே அந்வயித்தல், “நானும் பிறந்தமை பொய்யன்றே தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டும் என்று சொல்லுகிறபடியே பழுதாகாத வழியை யறிந்து வேறாகவேத்தி யிருக்குமவனைப் பற்றுதல்செய்து, தெளிவுற்று வீவின்றி நிற்குமவனுக்கு, ஶரீராவஸாநகாலத்திலே, ஈஶ்வரன் தன் திருவடிகளிலே இவன் தலைசாய்த்தவன்றுதொடங்கி ருணம் ப்ரவ்ருத்ம்”,  உன்னடியார்க்கு என்செய்வனென்றேயிருத்தி நீ என்கிறபடியே பெருந் தனிசாளனாய், ப்ரத்யுபகாரந்தேடித் தடுமாறி, திருத்திப் பணி கொள்ள நினைத்து, பல்வாங்கின பாம்பு போலே ஸம்ஸாரம் மறுவலிடாதபடி அடியறுக்கச் செய்தேயும் பிணமெழுந்து கடிக்கிறதோ என்று அதிஶங்கை பண்ணி, அமர்ந்த நிலத்திலே கொண்டுபோகையிலே விரைந்து, ‘இவன் விடாய் குளப்படிஎன்னும்படி கடல்போலே முற்றப்பருக வேண்டும்படி பெருவிடாயை யுடையனாய், ஒருமாநொடியும் பிரியாதே, சக்ரவர்த்தி பெருமாள் திருவபிஷேகத்துக்கு, வஸிஷ்ட வாமதேவாதிகளை யழைத்துப் பாரித்தாற் போலே, நித்யஸூரிகளை யழைப்பித்து வழியைக்கோடிப்பிப்பதாய்க் கொண்டு, அலங்காரவிதிம் க்ருத்ஸ்நம் காரயாமாஸ வேஶ்மநி என்கிறபடியே வீடுதிருத்தி, அநாதிகாலார்ஜிதங்களாய் இவன் ஆசார்ய ஸமாஶ்ரயணம் பண்ணின அன்றே தொடங்கி அருளென்னுந்தண்டாலடியுண்டு மூக்கும் முகமுஞ் சிதைந்து, பண்டு போலே வீற்றிருக்கை தவிர்ந்து மடியடக்கி நில்லாதே சரக்கு வாங்கி, மருங்குங்கண்டிலமால் என்னும்படி யொளித்து வர்த்திக்கிற பூர்வாகங்களையும், உத்தராகங்களையும், அநுகூலர் விஷயமாகவும், ப்ரதிகூலர் விஷயமாகவும், வருணனைக்குறித்துத் தொடுத்த அம்பை மருகாந்தரத்திலே விட்டாற்போலே அசல் பிளந்தேறிட்டு, இவனோடு ஸம்பந்தமுடையராய் நரகாநுபவம் பண்ணுகிறவர்களை ஏதத்ஸம்பந்திநஶ்சாந்யேஎன்கிறபடியே ஸ்வர்க்கஸ்தராம்படி நினைப்பிட்டு, “ஊட: பஞ்சாத்மநா தேந தார்க்ஷ்யரூபேண செழும்பறவை தானேறித்திரிவான் என்று சொல்லுகிறபடியே அருளாழிப்புட்கடவீர்என்று இவனாசைப்பட்டபடியே கொற்றப் புள்ளொன்றேறி வந்து தோன்றி, மஞ்சுயர் பொன்மலைமேலெழுந்த மாமுகில்போன்ற வடிவையநுபவிப்பித்து ஆதிவாஹிகரையழைத்தருளி, இவனை ஸத்கரிக்கும் க்ரமத்திலே ஸத்கரிக்க அருளிச்செய்ய, பின்பு இந்த்ரியைர்மநஸி ஸம்பத்யமாநை:” வாங்மநஸி ஸம்பத்யதே மந: ப்ராணே பிராணஸ் தேஜஸி தேஜ: பரஸ்யாம் தேவதாயாம் என்கிறபடியே, பாஹ்யகரணங்கள் அந்த:கரணத்திலே சேர்ந்து, அந்த: கரணம் ப்ராணனோடே சேர்ந்து, ப்ராணன் இச்சேதநனோடே ஸம்பந்தித்து, இவன் பூதஸூக்ஷ்ம விஶிஷ்டனாய்க் கொண்டு பரமாத்மாவின் பக்கலிலே சேரும். பின்பு கர்ம காலத்திலே ஆதித்யகிரணத்தாலே தப்தனானவன் நிழல்மரத்தைப்பற்றி இளைப்பாறுமா போலே, ஸம்ஸாரது:க்கார்க்க தாபதப்தனானவன் வாஸுதேவ தருச்சாயையைக் கிட்டி விஶ்ரமித்து, திருக்கோவலூருக்கு போம்போது திருமங்கையாழ்வாருக்கு தானுகந்த வூரெல்லாந் தன்தாள் பாடி என்கிறபடியே திருவுலகளந்தருளின திருவடிகளே பாதேயமாமாபோலே, “ப்ராணப்ரயாணபாதேயம் பாதேயம் புண்டரீகாக்ஷ நாம ஸங்கீர்த்தநாம்ருதம் என்கிறபடியே த்வயவசநமே பாதேயமாகவும், “ஏதேந ப்ரதிபத்யமாநா:” என்றும் தேவயாநபதாஸ்ஸர்வே முக்திமார்க்காபிலாஷிண:” என்கிறபடியே அர்ச்சிராதிமார்க்கமே பெருவழியாகவும், அண்டத்தப்புறத்துய்த்திடு மையனாய், ஆப்ததமனாய், படர்கொள் பாம்பணைப்பள்ளிகொண்ட சுரிகுழற் கமலக்கட் கனிவாய்க்காளமேகமான அரங்கத்துறையுமின்துணைவனே வழித் துணையாகவும், விரஜாதீரமும் தில்ய வ்ருக்ஷமும் ஜரம்ம்மதஹ்ரத தடமுமே விஶ்ரமஸ்தலமாகவும், திருமாமணிமண்டபமே புகலிடமாகவும், அர்ச்சிராதி புருஷர்களே உசாத்துணை யாகவும், சூழ்விசும்பணி முகிலினுடைய முழக்கமே ப்ரயாண படஹத்வநியாகவு மமைந்து வழியைத்தரும் நங்கள் வானவரீசனான ஹார்த்தன் வழி பாட்டோடவருள, வானேறவழிபெற்று, போக்கிலே யொருப்பட்டு ப்ரீத்யதிஶயத்தாலே, அநாதிகாலம் தன்னைக் குடிமைகொண்டுபோந்த ஸம்ஸாரத்தை நரகத்தை நகு நெஞ்சே என்கிறபடியே மாக வைகுந்தங் காண்பதற்குப் பண்டேயுண்டான ஆசை கொந்தளித்து மேலேமேலே பெருக, பிராட்டியும் ஸ்ரீவிபீஷணப்பெருமாளும் இலங்கையினின்றும் புறப்பட்டாற்போலே ஹ்ருதயகமலத்தினின்றும் புறப்பட்டு ஶதம் சைகா ச ஹ்ருதயஸ்ய நாட்ய:” என்கிறபடியே ஹ்ருதயத்தைப் பற்றிக்கிடக்கிற நூற்றொரு நாடியிலும் ஸுஷும்நை என்று பேரையுடைத்தான மூர்த்தந்யநாடியாலே வித்யாமஹாத்ம் யத்தாலும் தேவயாநாநுஸ்ம்ருதியாலும் ப்ரஸந்நனான ஹார்த்தன் கைவிளக்குப் பிடித்துக் கொண்டுபோகப் போய், ஶிர:கபாலத்தைப் பேதித்து, தா ஆஸு நாடீ ஷூ ஸ்ருப்தா: ஆப்யோ நாடீப்ய ப்ரதாயந்தே தேமுஷ்மிந்நாதித்யே ஸ்ருப்தா: அத ஏதைரேவ ரஶ்மிபிரூர்த்வம் ஆக்ரமதே என்கிறபடியே அந்நாடியோடே ஸம்பந்தித்து, ஆதித்யாஶ்மியை அநுஸரித்துக்கொண்டு, ஓங்காரரதமாருஹ்ய என்கிறபடியே ப்ரணவமாகிற தேரிலேயேறி, மநஸ்ஸு ஸாரத்யம் பண்ணப்போம்போது,  கையார் சக்கரத்தினின்று எல்லாவடிவும் புதுக்கணிக்குமாபோலே உபயவிபூதியும் புதுக்கணித்து கடல் தன் காம்பீர்யமெல்லாம் குலைந்து, கீழ்மண் கொண்டு மேல்மண்ணெறிந்து ஸஸம்ப்ரம ந்ருத்தம் பண்ணியார்க்க உபரிதநலோகங்களி லுள்ளார்களடைய உபஹாரபாணிகளாய், நெடுவரைத் தோரணம் நிரைத்து, ஆகாஶமெங்கும் பூர்ணகும்பங்களாலே பூர்ணமாக்கி, தூபநன்மலர் மழைபொலிந்து, இவனொருகால் தங்கிப் போமோ என்கிற நோயாசையாலே எதிரெதிரிமையவரிருப்பிடம் வகுக்க, லோகங்களெல்லாமதிரும்படி கடலிரைத்தாற்போலே வாத்யங்கள் எங்கும் முழங்க, வழியிலுள்ளார்களடைய போதுமினெமதிடம் புகுதுக என்கிறபடியே தந்தாம் ஸ்தாநங்களையும் ஐஶ்வர்யங்களையும் ஸமர்ப்பிக்க, சிலர் கீதங்கள்பாட, சிலர் யாகாதி ஸுக்ருத பலங்களை ஸமர்ப்பிக்க, வேறே சிலர் தூபதீபாதிகளாலே அர்ச்சிக்க, சிலர் காளங்கள் வலம்புரி கலந்தெங்கு மாரவாரிப்ப, வாளொண்கண் மடந்தையரான ஆதிவாஹிகமஹிஷிகள் இது அராஜகமாய்க் கிடக்கக்கடவதோ, இத்தை ஆளவேணும் என்று மங்களாஶாஸநம்பண்ண, மருதரும் வசுக்களும் இவன் விரைந்து போனால் ஈஸ்வரன் நமக்குக் கையடைப்பாக்கின நிலங்கழிந்ததென்றிராதே, லோகாந்தரங்களிலும் தொடர்ந்துசென்று இவன் செவிப்படும்படி ஸ்தோத்ரம்பண்ண, ‘மற்றெல்லாங்கைதொழப்போய் என்கிறபடியே பெரிய ஸத்காரத்தோடே போம்போது, “அர்ச்சிஷமேவாபிஸம்பவந்தி அர்ச்சிஷோஹ அஹ்ந ஆபூர்யமாணபக்ஷம்”, அக்நிர் ஜ்யோதிரஹஶ்ஶுக்லஷ்ஷண்மாஸா உத்தராயணம் என்று சாந்தோக்ய வாஜஸநேய கௌஷீதகீ ப்ரப்ருதிகளிற் சொல்லுகிறபடியே, அர்ச்சிராதி புருஷர்கள் வழிநடத்தப் போம்.
பிள்ளைலோகாசார்யர் திருவடிகளே சரணம்.



த்விதீயப்ரகரணம்


        அதில் முற்பட அர்ச்சிஸ்ஸைக்கிட்டி, அவன் சிறிதிடம் வழிநடத்த, பின்பு அஹஸ்ஸையும், ஶுக்லபக்ஷாபிமாநியையும், உத்தராயணாபிமாநியையும், ஸம்வத் ஸராபிமாநியையும், வாயுவையுங் கிட்டி, அவர்கள் வழிநடத்த, ப்ரவிஶ்ய ச ஸஹஸ்ராம்ஶும் மன்னுங்கடுங்கதிரோன் மண்டலத்தினன்னடுவுள் என்கிறபடியே,  ஹிரண்மயமாய், காலசக்ரப்ரவர்த்தகமான தேரார் நிறைகதிரோன் மண்டலத்திலே எதிர்விழிக்கவொண்ணாதபடி நிரவதிக தேஜஸ்ஸோடே எதிரே ஒரு ஆதித்யன் செல்லுமாபோலே சென்று, அவன் மண்டலத்தைக் கீண்டுபுக்கு அவ்வருகே போய், க்ரமாச்சந்த்ரமஸம் ப்ராப்ய என்கிறபடியே க்ரஹநக்ஷத்ரதாரகா நிர்வாஹகனாய்  அம்ருதாத்மகனாயிருந்துள்ள சந்த்ரனைக்கிட்டி, அவன் ஸத்கரிக்க அவ்வருகே போய் அமாநவனைக்கிட்டி, அவன் வழிநடத்த, ஸர்வாப்யாயகனான வருணனும், த்ரைலோக்ய பாலகனான இந்த்ரனும், முக்தராய்ப்போகுமவர்களை ஸர்வப்ரகாரத்தாலும் மிகவும் ஶ்லாகிக்கக் கடவர்களாய், ஸுராஸுர கந்தர்வ யக்ஷ ராக்ஷஸ நிர்வாஹகனான ப்ரஜாபதியையும் சென்றுகிட்டி, அவர்கள் லோகங்களையும் கடந்து, அண்டத்தையும்,  தஶோத்தரமான ஆவரண ஸப்தகத்தையும், முடிவில் பெரும்பாழான மூல ப்ரக்ருதியையும் கடந்து; - முன்பு ஸம்ஸாரியான நாளில் அந்தகாராவ்ருதமாய், நீரும் நிழலுமின்றிக்கே பீதோஸ்ம்யஹம் மஹாதேவ ஶ்ருத்வா மார்க்கஸ்ய விஸ்தரம் என்கிறபடியே, கேட்டபோதே துளங்கவேண்டும்படியான கொடிய வழியிலே, யமபடர் பாசங்களாலும், புத்ரதாரமய பாசங்களாலும் கட்டுண்டு, யமதூதராலே இழுப்புண்டு, தொடைவழி நாய்கள்கவர, ஶக்தி ஶங்கு தோமர ஸாயக ஶூலாதிகளாலே நோவுபட்டு, வ்யாக்ர கிங்கரரான ராக்ஷஸர் முகங்களுக் கிரையாய் உடம்பெங்கும் சீயும் ரத்தமும் வடிய, பசியும் தாகமும் மேலிட்டு, தூதரைச் சோறும் தண்ணீரும் வேண்டி, மூக்கும் முகமும் உதடும் பல்லுந்தகர்ந்து, கையுங்காலுமொடிந்து கூப்பிட்டுப்போன இழவுதீர ஸுகோத்தரமான மார்க்கத்தாலே இவ்வெல்லை கடந்தபோதே தொடங்கிக் கண்டாரடைய ஸத்கரிக்க, தனக்கு உபாயமான பாரளந்த பாதபோதுபோலேயும், அந்தரமேழினூடு செலவுய்த்த பாதம்போலேயும் கடுநடையிட்டுப்போய், ஶப்த ஸ்பர்ஶாசாதிகளாகிற ஸிம்ஹவ்யாக்ராதிகளைத் தப்பி, ஸம்ஸாரமாகிற பெருந் தூற்றினின்றும் புறப்பட்டு, தாப த்ரயமாகிற காட்டுத்தீயிலே அகப்பட்டுப் பட்ட க்லேஶமெல்லாந்தீர, “ததஸ்து விரஜாதீரப்ரதேஶம் ஸ கச்சதி விரஜாம் நதீம் என்கிறபடியே அம்ருத வாஹிநியாய், வைதரணிக் கெதிர்த்தட்டான விரஜையைச் சென்றுகிட்டி, வன்சேற்றள்ளலையும் வாஸநாரேணுவையுங் கழுவி, மேகாவ்ருதமான ஆதித்யமண்டலம்போலேயும், ராஹுக்ரஸ்தமான சந்த்ரமண்டலம் போலேயும், சேற்றிலழுந்தின மாணிக்கம்போலேயும் அழுக்குடம்பிலே யகப்பட்டுத் திரோஹித ஸ்வரூபனான இவன் அதுவும் நிவ்ருத்தமாய், தத்தோயஸ்பர்ஶமாத்ரேண என்கிறபடியே விரஜாஜலஸ்பர்ஶத்தாலே திரோதாயகமான ஸூக்ஷ்மஶரீரமுங் கழியப் பெறுகையாலே ஸூர்யகோடி ப்ரதீகாஶ:” என்கிறபடியே அநேகமாயிரமாதித்யர்கள் சேரவுதித்தாற்போலே கண்கொண்டு காணவொண்ணாதபடி நிரவதிக தேஜஸ்ஸை யுடையனாய், அமாநவம் ஸமாஸாத்ய என்கிறபடியே சதுர்புஜனாய், ஶங்க சக்ர கதாதரனாய், விரஜைக்கரையிலே யெழுந்தருளியிருக்கிற அமாநவனைச் சென்று கிட்டி, அவன் திருக்கைகளாலே ஸ்பர்ஶிக்க, பின்பு லாவண்ய ஸௌந்தர்யாதி கல்யாணகுணகரமாய் ஶுத்தஸத்வமயமாய், பகவதநுபவைக பரிகரமான விக்ரஹத்தைப்பெற்று, இந்த்ராதி பதங்கள்போலே கர்மஸாத்யமாய், நஶ்வரமாய், குணத்ரயாத்மகமாயிருக்கையன்றிக்கே, பகவத் ப்ரீதிஸாத்யமாய் நித்யமாய், ஶுத்த ஸத்வாத்மகமாய் இல்லைகண்டீரின்பம் என்கிறதுக்கு எதிர்த்தட்டாக நலமிந்தமில்லதோர் நாடாய், இருள்தருமா ஞாலத்துக்கு எதிர்த்தட்டாக தெளிவிசும்பு திருநாடு என்கிறபடியே தெளிதாகிய சேண்விசும்பாய், ஸநகாதிகள் நெஞ்சுக்கும் நிலமன்றிக்கே பகவதாநுகூல்யைக போகரான நித்யஸித்தராலே நெருங்கி அவர்களாலும் அளவிடவொண்ணாத அளவையும், ஐஶ்வர்யத்தையும் ஸ்வபாவமாக வுடைத்தான திவ்யதேஶத்தைக் கண்களாரளவும் நின்று கண்டு, விண்ணைத் தொழுது என்கிறபடியே தொழுது அமாநவ பரிஸரத்திலே ஶங்க காஹள பேரிகளினுடைய முழக்கத்தைக்கேட்டு, “ஓடுவார் விழுவாருகந்தாலிப்பார் நாடுவார் நம்பிரா னெங்குற்றானென்பார் கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம்தொண்டீரெல்லீரும் வாரீர் என்பாராய்க்கொண்டு பெரிய ஆர்ப்பரவத்தைப் பண்ணித் திரள்திரளாகப் புறப்பட்டு வருகிற நித்ய முக்தருடைய ஆநந்த களகளத்தைக் கண்டு அநுபவித்துக்கொண்டு, பெரிய ப்ரீதியோடே போகிறவளவிலே, “தம் பஞ்சஶதாந்ய ப்ஸரஸாம் ப்ரதிதாவந்தி தத்ராகத்ய ச தேவாஸ் ஸாத்யாஶ்ச விமலாஶயா:” என்கிறபடியே திவ்யமால்யம், திவ்யாஞ்ஜநம், திவ்யசூர்ணம், திவ்யவஸ்த்ரம், திவ்யாபரணம் தொடக்கமானவற்றைத் தரித்துக்கொண்டு, ஐந்நூறு திவ்யாப்ஸரஸ்ஸுக் களும், நித்யஸூரிகளும் எதிரேவந்து ப்ரஹ்மாலங்காரேண ப்ரஹ்மாலங்க்ரியா என்கிறபடியே அலங்கரித்து, உடுத்துக்களைந்த நின்பீதகவாடை, சூடிக்களைந்த திவ்ய மால்யம், திவ்யாபரணங்கள், திவ்யாங்கராகங்கள் தொடக்கமானவற்றாலே அலங்க்ருதனாயிருக்கிறபடியைக் கண்டு புனையிழைகளணிவும் ஆடையுடையும் புதுக் கணிப்பும் நினையும் நீர்மையதன்று என்று விஸ்மிதராய்க் கொண்டாட, பின்பு அநேகமாயிரங்கொடிகளாலும், முத்துத்தாமங்களாலும், மேற்கட்டிகளாலும் அலங்க்ருதமாய், திவ்யஸ்திரீபரிவ்ருதமாய் பகவத்ஸங்கல்ப கல்பிதமா யிருப்பதொரு திவ்யவிமாநத்தைப் பெரியதிருவடி கொண்டு வர, அதிலே இவனையேற்றி ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டு திவ்யகாந்தாரத்தளவிலே சென்றவாறே; நாநாவிதமான உபஹாரங்களை ஏந்திக்கொண்டு வேறே சில திவ்யாப்ஸரஸ்ஸுக்கள் எதிரேத்தி ஸத்கரிக்க, பின்பு திவ்யகந்தம் ப்ரஹ்மகந்தம் தொடக்கமான அப்ராக்ருத கந்தங்களை ஆக்ராணம்பண்ணி ஸர்வகந்தனாய்கொடியணி நெடுமதிள் கோபுரங்குறுகினர் என்கிறபடியே த்வஜபதாகாதிகளாலே அலங்க்ருதமான திவ்ய கோபுரத்தைக் கிட்டி,  திருவாசல் காக்கும் முதலிகள் வைகுந்தன் தமரெமரெமதிடம் புகுது என்கிறபடியே பெரிய ஆதரத்தோடே ஸத்கரிக்க, ஸமதீத்ய ஜநாகுலம் கவாடங்கடந்து புக்கு என்கிறபடியே நெஞ்சையும் கண்ணையும் வருந்தி மீட்டுக்கொண்டு, அயோத்யையென்றும் அபராஜிதையென்றுஞ் சொல்லப்படுகிற ஏர்கொள் வைகுந்தமாநகரத்திலே ஒரு வண்ணஞ் சென்று புக்கு ஸ்ரீவைகுண்டாய திவ்யநகராய நம:” என்று கண்ணன் விண்ணூரைத் தொழுது வைகுந்தத்தமரரும் முனிவரும், கடலில் நீர் ஸஹ்யத்திலே ஏறக்கொழித்தாற் போலே ஸம்ஸாரஸ்தனான இவன் இத்தேஶத்திலே வரப்பெறுவதே!’ என்று விஸ்மிதராய்க் கொண்டாட, பின்பு கோயில்கொள் தெய்வங்களான பெரிய திருவடி, ஸ்ரீஸேநாபதியாழ்வான் தொடக்கமானவர்கள் தந்தாம் திருமாளிகைகளிலே கொண்டுபுக்கு, இவனை ஆஸநத்திலே உயர வைத்து, தாங்கள் தரையிலேயிருந்து, தங்கள் மஹிஷிகள் நீர்வார்க்க ஸ்ரீபாதம் விளக்கி, தங்கள் மஹிஷிகளுக்கு தேவர் வைகல் தீர்த்தங்களே என்று இவன் ப்ரபாவத்தைச் சொல்லி, ஸத்கரிக்கும் க்ரமத்திலே சத்கரிக்க, பின்பு ஸ்ரீசடகோபனும், திவ்யசூர்ணங்களும், பூர்ண கும்பங்களும், மங்கள தீபங்களும் ஏந்திக்கொண்டு, தேஶாந்தரகதனாய் வந்த புத்ரனைக் கண்ட தாய்மாரைப் போலே குளிர்ந்த முகத்தையுடைய மதிமுகமடந்தையர் வந்தெதிர் கொள்ள, பெருந்தெருவாலே உள்ளேபுக்கு, திவ்யாவரண ஶதஸஹாஸ்ராவ்ருதமான செம்பொன் செய் கோயிலைக்கிட்டி, ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமாநாயா நம:” என்று தண்டனிட்டு ஒருபாட்டம் மழை விழுந்தாற்போலே தன்னுடைய வரவாலே தளிர்த்துச் செருத்தி இலையும் மரமும் தெரியாதபடி பஹூவிதமான நிறத்தையும் கந்தத்தையு முடைய அப்ராக்ருத புஷ்பங்களாலே நெருங்கித் தேன் வெள்ளமிடுகிற கற்பகச் சோலைகளாலும், நாநாவிதமான பூக்களாலும், ரத்னங்களாலும் சமைந்த லீலா மண்டபங்களாலும், அபூர்வவத்விஸ்மய ஜநகங்களான க்ரீடாஶைலங்களாலும், ஸ்ரீவைகுண்டநாதனுக்கும் பெரியபிராட்டியார்க்கும் லீலாபரிகரங்களாய், செவிகளடைய மயிர்க் கூச்சிடும்படி இனிய பேச்சுக்களுடைய ஶுக ஶாரிகா மயூர கோகிலாதிகளாலும் ஆகுலங்களாய், மாணிக்கம் முத்து பவளம் தொடக்கமான வற்றாலே சமைந்தபடிகளை யுடைத்தாய், நித்யமுக்தர்களுடைய திருவுள்ளங்கள் போலே குளிர்ந்து, தெளிந்து, அம்ருதரஸங்களான திவ்யஜலங்களாலே நிறைந்து, நாநாவித, பக்ஷிஸங்க ஸமாகீர்ணமாய்த் துளும்பி யெங்குஞ்சொரிகிற தேன் வெள்ளத்தை யுடைத்தாய் மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் என்கிறபடியே மதிமுக மடந்தையருடைய திருமுகங்களுக்கும் திருக்கண்களுக்கும் போலியான தாமரை செங்கழுநீர் தொடக்கமான அப்ராக்ருத புஷ்பங்களையுடைய ஓதநெடுந் தடங்களாலும் நாநாவிதமான பூம்படுக்கைகளாலும், பரிமளம்போலே பூக்களிலே படிந்து மதுவெள்ளத்திலே முழுகிப் பாட்டுக்களாலே அநுமேயங்களான தெய்வவண்டு களினுடைய திவ்யகாநத்தாலும் கிட்டினாரைப் பிச்சேற்றுகிற திவ்யோத்யாந ஶதஸஹஸ்ரங்களாலும் சூழப்பட்டு, நாநாரத்நங்களாலே சமைந்த ஸ்தலங்களையு முடைத்தாய், அநேகமாயிரம் ரத்நஸ்தம்பங்களாலே அலங்க்ருதமாய், உபயவிபூதியிலுள்ளாறும் ஒரு மூலையிலே அடங்கும்படி இடமுடைத்தாய், தாமரை, செங்கழுநீர், சந்தநம், அகில், கர்ப்பூரம் தொடக்கமானவற்றை அமைந்து வருகிற மந்த மாருதனாலே சேவ்யமாநமாய், நிரதிசயாநந்தமயமான திருமாமணி மண்டபத்தைச் சென்று கிட்டி, ஆநந்தமயாய மண்டபரத்நாய நம:” என்று தண்டனிட்டு, அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுதை எப்போதுமொக்கப் பருகுகையாலே இளகிப் பதித்து வைகுந்தக் குட்டனோடு ஸாம்யாபந்நராய் அநுபவஜநிதமான ஹர்ஷப்ரகர்ஷத் துக்குப் போக்குவிட்டு ஸாமகாநம் பண்ணுவார், செஞ்சொற் கவிகாள் உயிர் காத்தாட் செய்மின் என்று இன்பவாற்றிலே ஶீலகுணமாகிற ஆழங்காலிலே கொண்டைக்கோல் நாட்டுவார், ஸ்வாசார்யனைக் குறித்து இழைகொள் சோதிச் செந்தாமரைக் கட்பிரா னிருந்தமை காட்டினீர் என்பார், “உற்றேனுகந்து பணிசெய் துனபாதம் பெற்றேனீதே இன்னம் வேண்டுவதெந்தாய் என்பார், “என் முடிவு காணாதே என்னுள் கலந்தானைச் சொன் முடிவு காணேன் நான் சொல்லுவதென் சொல்லீர் என்பார், “நமோ நாராயணாய என்பார் என்கிறபடியே ஓவாதுரைக்குமுரையான பெரியதிருமந்த்ரத்தைச் சொல்லி, தோள்களையாரத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதி!” என்று ஆத்மஸமர்ப்பணம் பண்ணுவார், உருகுமாலிலே ஆழ்வார் பட்டதுபட்டு, வல்வினை யேனை யீர்கின்ற குணங்களையுடையாய் என்று அம்பு பாடரைப் போலே உழைப்பார்,  மேலைத் தொண்டுகளித்துஎன்கிறபடியே தாஸ்யரஸம் தலைமண்டையிட்டுநம இத்யேவ வாதிந:” நமஶ்ஶப்தம் ப்ரயுஞ்ஜதே என்கிறபடியே அந்திதொழுஞ் சொல்லைச் சொல்லுவாராய்க் கொண்டு, இப்படி ப்ரளயஜலதியிலே அலைவாரைப்போலே ஆநந்த ஸாகரத்திலே அலைந்து, நித்யமுக்தர் சொல்லுகிற செவிக்கினிய செஞ்சொற்களாலே வெஞ்சொலாளர்களுடைய கடுஞ்சொல்லைக்கேட்ட இழவுதீரச் செவிக்கிரையிட்டுக் கொண்டுபோய், திவ்யஸ்தாநத்தைக் கிட்டி, அப்பேரோலக்கத்தின் நடுவே, தந்தாம் திருமுடிகளிலே திவ்யாயுதங்களைத் தரித்துக் கொண்டு கூப்பின கைகளும் தாங்களு மாயிருக்கிற அஸ்த்ர ஶஸ்த்ராக்யரான திவ்யபுருஷர்களும், தம்முடைய ஸங்கல்பத் தாலே ஸகலஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப் பண்ணக்கடவ ஸேநை முதலியார் தொடக்கமான திவ்யபுருஷர்களும் வரிசையடைவே ஸேவித்திருக்க

பிள்ளைலோகாசார்யர் திருவடிகளே ஶரணம்.




த்ருதீயப்ரகரணம்


உபயவிபூதியும் தொழிலாக வகுப்புண்டு, ஸர்வாஶ்சர்யமயமான கோப்புடைய சீரிய சிங்காசனத்திலே பன்னிரண்டிதழாய், நாநாஶக்திமயமான திவ்ய கமலமாய், அதில் திவ்யகர்ணிகையிலே புஷ்ப ஸஞ்சய விசித்ரமான திவ்யயோகபர்யங்கமாய், அதின்மேலே அநேகமாயிரம் சந்த்ரர்களை உருக்கிவார்த்தாற்போலே குளிர்ந்த புகரை யுடைத்தான திருமேனியையுடையனாய், கல்யாணகுணங்களுக்கு அந்தமில்லாமையாலும் ஸர்வவிதகைங்கர்யபரற்கு எல்லாம் படிமாவாயிருக்கை யாலும் அனந்தனென்றும் சேஷனென்றும் திருநாமத்தையுடையனாய் பவதநுபவத் துக்குப் போக்குவீடாகப் பல வாய்த்தலைகளையுமுடையனாய்,  விஜ்ஞாநபலங்களுக்கும் ஶைத்ய மார்த்தவ ஸௌரப்யாதி குணங்களுக்கும் கொள்கலமான திருவனந்தாவாழ்வானாகிற படுக்கையிலே, ரஜதகிரி ஶிகரத்திலே அநேகமாயிர மாதித்யர்கள் சேர உதித்தாற்போலேயிருக்கிற பணாமண்டலங்களில் ஜ்யோதிர் மண்டலத்தின் நடுவே; பதிம் விஶ்வஸ்யஎன்கிறவனுக்கும் தன் பூர்த்தியாலே பொறிபுறந்தடவ வேண்டும்படியான பூர்த்தியையும், “வாசஞ்செய் பூங்குழலாள்என்கிறபடியே நாற்றத்துக்கும் நாற்றங்கட்டலாம்படியான பூங்குழலையும், புண்டரீகாக்ஷனையுங்கூடக் குடிநீர் வார்ப்பித்துக்கொண்டு ஒருமூலையிலே குமிழ் நீரூட்டும்படியான வடிக்கோல வாணெடுங்கண்களையும், போத்துக்கு ஏகாந்தமான ஒப்பனைபோலே பால்யமத்யத்திலே மெய்க்காட்டுகிற யௌவநத்தையும், பேசில் பிசகும்படியான ஸௌகுமார்யத்தையும், “பித்தர் பனிமலர் மேற்பாவைக்கு என்கிறபடியே அல்லாதவர்கள் பக்கல்போலே நூல்பிடித்துப் பரிமாறவொட்டாத போக்யதாப்ரகர்ஷத்தையும் போகோபோத்காத கேளியிலே பவத் வைஶ்வரூப்யத்தைச் சிறாங்கிக்கும்படியான பெருமையையுமுடையளாய், திவ்ய பரிஜநங்களை தத்ததவஸ்தாநுரூபமாக திவ்யபரிசர்யையிலே நியோகியா நிற்பாளாய், ஸர்வாத்மாக்களுக்கும் என்றுமொக்கச் சார்வாய், ஶீலரூபகுண விலாஸாதிகளாலேஉனக்கேற்கும் என்னும்படியிருக்கிற ஒசிந்த வொண்மலராளான பெரிய பிராட்டியார் வலவட்டத்திலே யெழுந்தருளியிருக்க, அவளிலுங் காட்டில் விஞ்சின க்ஷமாதயாதிகுணங்களையும், நாவால் தொகைக்க வொண்ணாத அழகையுமுயுடையராய், அவளுக்கு நிழல்போல்வனரான மற்றையிரண்டு நாய்ச்சிமாரும் இடவட்டத்திலே ஸேவித்திருக்க; இவர்களுக்கு நடுவே மூன்று மின்கொடிகளோடேகூடி, தாமரை பூத்ததொரு காளமேகம் வெள்ளிமலையைக் கினியப்படிந்திருக்குமாபோலே முடிச்சோதியா யுனது முகச்சோதி மலர்ந்ததுவோ என்கிறபடி திருமுகமண்டலத்தில் ஒளிவெள்ளமானது மேல் நோக்கிக் கொழித்தாற் போலேயாய் உபய விபூதிக்கும் நிர்வாஹகனென்னுமிடத்தைக் கோட்சொல்லித் தரக் கடவதாய், தன்புகராலே அல்லாத புகாரையடைய முட்டாக்கிடுகிற விண்முதல் நாயகன் நீண்முடி என்கிற திருவபிஷேகத்தையும், கண்டார் கண்ணும் நெஞ்சு மிருளும்படி இருண்டு சுழன்று, அஷ்டமீசந்த்ரனிலே அம்ருததாரை விழுந்தாற் போலே திருநெற்றியிலே சாத்தின திருநாமத்தை மறைப்பது காட்டுவதாய்க்கொண்டு அசைந்து விழுகின்ற பூந்தண்டுழாய் விரைநாறுகிற நீலப்பனியிருங் குழல்களையும், ஸௌகுமார்யாதிஶயத்தாலே குறுவேர் பரம்பினாற்போலேயாய், நயந்தார்கட்கு நச்சிலையான திருநெற்றியையும், அலர்ந்து குளிர்ந்திருக்கிற இரண்டு தாமரைப் பூக்களை மதத்தாலே அமுக்கியாடுகிற இரண்டு வண்டொழுங்கு போலேயிருக்கிற தன்கைச் சார்ங்கமதுவேபோல் அழகிய திருப்புருவங்களையும், கலந்து பிரிந்தவர்களுக்கு இணைக்கூற்றங்களாய் அல்லாதவர்களைத் தாயாயளிக்கக் கடவதாய், சேதநர்பக்கல் வாத்ஸல்யாதிஶயத்தாலும், செய்யாளான பிராட்டியை எப்போதுமொக்கக் கடாக்ஷிக்கையாலும், உபயவிபூத்யைஶ்வர்யத்தாலும் சிவந்து, “பதிம் விஶ்வஸ்ய என்கிற ப்ரமாணம் வேண்டாதபடி அனைத்துலகுமுடைய அரவிந்த லோசனனைஎன்கிறபடியே ஸர்வேஶ்வரத்வ சிஹ்நமாய், வேறோரழகில் செல்ல வொட்டாதே தனக்கே யற்றுத்தீரும்படி பண்ணி தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவுந் தலைமகனை என்கிறபடியே த்ரிபாத்விபூதியையும் எழுத்து வாங்கிக் கூப்பிடும்படி பண்ணக்கடவதாய், குளிர்ந்து செவ்விபெற்று, பெரியபெருமாள் திருக்கண்கள்போலே  கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி, இலங்கொளி சேரரவிந்தம் போன்று நீண்டு, மிதோத்ஸ்பர்தஸ்புரிதஶபரத்வந்த்வலளிதங்களாய், அழகோலக் கங்கிளம்பினால் அடையாளங்களான தூதுசெய்கண்களையும், மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் என்று நித்யஸந்தேகஜநகமான கோல நீள்கொடிமூக்கையும், அதினுடைய பல்லவோல்லாஸம்போலேயிருக்கிற திவ்ய கபோலங்களையும், அதினுடைய நவகுஸுமம்போலேயாய், “பன்னிலாமுத்தந்தவழ் கதிர் முறுவல்செய்து என்கிறபடியே பூர்ணசந்த்ரன் முழுநிலாவைச் சொரிந்தாற் போலே திருமுத்தினொளியை ப்ரவஹிக்கிற ஸ்மிதத்தையும், கோலந்திரள் பவளக் கொழுந்துண்டம் போலேயாய், பேச்சில் செல்லவொட்டாதே வாய்கரையிலே நீச்சாம்படி பண்ணி, நட்டாற்றிலே தெப்பத்தைப் பறிப்பாரைப்போலே அநுபவ பரிகரமான சிந்தையைக் கவர்ந்து, கூப்பிடும்படி பண்ணக்கடவதாய் கள்வப்பணி மொழிகளுக்கு ஆகரமான திருவதரத்தையும், இலகுவிலகுமகரகுண்டலத்தன் என்கிறபடியே ப்ரீத்யதிஶயத்தாலே ஶிர:கம்பநம் பண்ணுகையாலே அசைந்து, திந்தங்களிலேமுட்டி, தேஜஸ்ஸு அலையெறிந்து லாவண்யஸாகரத்திலே யேறித் தள்ளுகிற மின்னுமாமணி மகரகுண்டலங்களையும், காந்தி ஶைத்ய மார்த்தவ ஸௌரப்யாதி குணங்களாலே, சுற்றுமொளிவட்டஞ்சூழ்ந்து என்கிறபடியே, ஸகல கலாபூர்ணமாய், ஸர்வாஹ்லாதகரமாய், மறுக்கழற்றின சந்த்ரமண்டலத்தையும் அப்போதலர்ந்த செந்தாமரைப்பூவையும் தோற்ப்பிக்கக்கடவதாய், கிட்டினாரைப் பிச்சேற்றி மையலேற்றி மயக்கும் மாயமந்திரமான கோளிழை வாண்முகத்தையும்,  நாய்ச்சிமாருடைய ஹஸ்தாபரணங்களாலே முத்ரிதமாய், க்ரமுக தருண க்ரீவா கம்பு ப்ரதிமமான திருக்கழுத்தையும், நாய்ச்சிமாருடைய திருச்செவிப்பூக்களாலும் கர்ணபூஷணங்களாலும், விகஸிதமான திருக்குழற் கற்றையாலுமுண்டான விமர்தத்தாலே (ஸீதயா ஶ்ஶோபிதம்) என்கிறபடியே அலங்க்ருதங்களாய், இரண்டட்டத்திலும் மரதககிரியைக்கடைந்து மடுத்தாற்போலே திண்ணியவாய், கணையத்துக்குள்ளே யிருப்பாரைப்போலே தன்னையண்டைகொள்ளுகையாலே, ஸம்ஸாரத்திலே யிருக்கச் செய்தேயும் நிர்பரனாம்படிபண்ணி, “அலம்புரிந்தஎன்கிறபடியே தனக்கு உபயவிபூதியையும் வழங்கி திவ்யாஸ்த்ர புஷ்பிதங்களா யிருக்கிற கற்பகக்காவன நற்பலதோள்களையும், பெரிய பிராட்டியாருக்கு கோயிற் கட்டணமாய் நித்யாநுபவம் பண்ணாநிற்கச்செய்தேயும் இறையுமகலகில்லேன் என்னும்படி பிச்சேற்றக்கடவதாய், அவள் திருவடிகளிற்சாத்தின செம்பஞ்சுக் குழம்பாலும், ஸ்ரீபூமிப்பிராட்டியாருடைய கொங்கைமேற் குங்குமத்தின் குழம்பாலு மலங்க்ருதமாய், வநமாலா விராஜிதமாய், பெரியபிராட்டியாருக்கு ஹிரண்ய ப்ராகாரமான கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் ஸ்ரீகௌஸ்துபந் தொடக்கமான குருமாமணிப்பூண் குலாவித்திகழுகிற அழகியதிருமார்பையும், காளமேகத்திலே மின்கொடி படர்ந்தாற்போலே திருமேனிக்குப் பரபாரஸாவஹமாய், அழகு வெள்ளத்துக்கு அணைகட்டினாற்போலே யிருக்கிற வெண்புரி நூலையும், உள்ளத்துள் நின்றுலாகின்றதே என்கிறபடியே நித்யமுக்தருடைய திருவுள்ளங்களிலே அழகு செண்டேறுகிற திருவுதரபந்தத்தையும், ஸௌந்தர்யஸாகரமிட்டளப்பட்டுச் சுழித்தாற்போலே நெஞ்சையும் கண்ணையும் சுழியாறு படுத்துகிற திருவுந்தியையும், ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும் திருவாழியையும் சந்த்ராதித்யர்களாகக் கருதி ஆங்கு மலருங் குவியும் என்கிறபடியே அலருவது குவிவதாய், விதிஶிவநிதாநமான நாபீபத்மத்தையும், துடிசேரிடையையும், ஸந்த்யாராகரஞ்ஜிதமான ஆகாஶம் போலே யிருக்கிற திருவரைக்குப் பரபாகாரஸாவஹமாய், திருவரை பூத்தாற்போலே யிருக்கிற அந்திபோல் நிறத்தாடையையும், ரம்பாஸ்தம்பாதி கம்பீரமான திருத் தொடைகளையும், தாமரைநாளம்போலே கண்டகிதங்களான திருக்கணைக் கால்களையும், ஶங்கரதாங்ககல்பகத்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநமாய், நாய்ச்சிமாருங்கூட கூசித்தொட வேண்டும்படி அத்யந்தம் ம்ருதுக்களாய், தேனே மலரும் என்கிறபடியே நிரதிஶய போக்யங்களான துயரறு சுடரடிகளையும், லாவண்ய ஸாகரத்தினுடைய திரையொழுங்கு போலேயிருக்கிற திருவிரல்களையும் அதிலே அநேகசந்த்ரர்கள் தோற்றினாற்போலேயிருக்கிற திவ்யநகங்களையும், வயிரவுருக்காய் ஆண்களையும் பெண்ணுடையுடுத்தி,ந்துக்களோடு உறவறுத்து நாட்டைப் பகைவிளைத்து, சேணுயர்வானத்திருக்குந் தேவபிரான்தன்னை குதிரியாய் மடலூர்தும் என்கிறபடியே கண்டபோதே கையும் மடலுமாய்க்கொண்டு புறப்படும்படி பண்ணக்கடவதாய், கண்டபோதே எல்லா விடாயுங்கெட்டு, கண்டகண்கள் மயிரெறியும்படி இருண்டு குளிர்ந்து, ஸாம்யாபந்நரான ஸூரிகளுடைய நெஞ்சையும் கண்ணையும் படையறுத்து இன்னாரென்றறியேன் பண்டிவரைக் கண்டறிவ தெவ்வூரில் என்று மதிமயங்கும்படி பண்ணக்கடவதாய், ஸகலஜந ஜீவாதுவாய், வைதக்த்ய வித்யாக்ருஹமாய், மநோரதா நாமபூமியாய், ஶ்ருத்யந்த வாக்ய ஸர்வஸ்வம்மாய், மாணிக்கச்செப்பிலே பொன்னையிட்டு வைத்தாற்போலே யிருக்கப் பொன்னுருவான திவ்யாத்மஸ்வரூபத்துக்கு ப்ரகாஶகமாய், ஒன்றுக்கொன்று தள்ளி [1]இட்டளத்தில் வெள்ளம்போலே சுழித்துநின்று, முழாவுகிற ஆயுதாரணங்களுடைய சோதி வெள்ளத்தினுள்ளே உந்நேயமான கரியகோலத் திருவுருவையும் நித்யஸூரிக ளடுத்தடுத்துப் பார்க்கிற பார்வையும் கூடப் பொறாது என்னும்படியான ஸௌகுமார்யத்தையும், பெரியபிராட்டியாருடைய வடிக்கோல வாணெடுங் கண்களுக்கு நித்யலக்ஷ்யமாகையாலே அரும்பென்றும் அலரென்றும் சொல்லலாம் படியான செவ்வியையும் [2]கிண்ணகத்துக்கு படலிட்டாற் போலேயிருக்கிற மெய்யமர் பல்கலன்களையும், நித்யஸூரிகளைக் கொள்ளையூட்டிக்கொண்டு விடாயர்முகத்திலே நீர்வெள்ளத்தை திறந்துவிட்டாற்போலே ஸகலஶ்ரமங்களுமாறும்படி குளிர்ந்து, தெளிந்து கநககிரியையுருக்கிக் கடலிலேவிளாசினாற்போலே செம்பொனே திகழுகிற ஶ்யாமமான திருமேனியொளியாலேவிஶ்வமாப்யாயயந் என்கிறபடியே ஸகல ஜகத்தையும் ஆப்யாயநம் பண்ணி, தெருவெல்லாங் காவிகமழ்என்கிறபடியே கண்டவிடமெங்கும் புறப்பட்டு ப்ரவஹிக்கிற திருமேனியில் பரிமளத்தாலே ஸ்ரீவைகுண்டத்தை யெங்குமொக்கப்பரிமளிதமாக்கி, ஆலங்கட்டியை விட்டெறிந்தாற் போலே உடம்பெங்கும் வவ்வலிடும்படி குளிர்ந்து அரைக்ஷணமாறில் நித்யமுக்தரை ஒரு நீர்ச்சாவியாக்குகிற கடாக்ஷாம்ருத வ்ருஷ்டிகளாலே திவ்ய கோஷ்டியை தளிரும் முறியுமாக்கி, காம்பீர்யமாதுர்யாதி யநவதிக குண கண பூஷிதங்களாய் அதிமநோஹர திவ்யபாவ கர்பங்களாய், பூவலர்ந்தாற் போலே யிருக்கிற திருமுகத்தை யெங்குமொக்கச் செவ்விபெறுத்துவனவான லீலா லாபங்களாலே ஸூரிகளுடைய ஹ்ருதயங்களை யுகப்பியாநின்றுகொண்டு, உபய விபூதியையும் ஆஸநபலத்தாலே ஜயித்து,

பிள்ளைலோகாசார்யர் திருவடிகளே ஶரணம்


சதுர்த்தப்ரகரணம்


        ஏழுலகுந் தனிக்கோல்செல்ல, குழுமித்தேவர் குழாங்கள் கைதொழ வெழுந்தருளியிருக்கிற ஸ்ரீவைகுண்டநாதனை காண்பதெஞ்ஞான்றுகொலோ காட்டீரானீர் என்கிற இழவுதீர, த்ருஷ்ட ஏவஹி நஶ்ஶோகம்என்று இவன் மநோரதித்துக்கொண்டு, சென்றபடியே கண்ணாரக்கண்டு, ஸமஸ்த பரிவாராய ஸ்ரீமதே நாராயணாய நம:” என்று ஹர்ஷபரவசனாய் விழுந்தெழுந்திருந்து பெரிய ப்ரீதியோடு சென்று, பாதபீடத்திலே அடியிட்டு திவ்ய ஸிம்ஹாஸனத்திலேயேற, அவனும் இவனைக் கண்டு அவாக்யநாத:” என்கிற ஆகாரங்குலைந்து, சந்த்ரனைக் கண்ட கடல்போலே விக்ருதனாய், தன்னைப்பிரிந்து நெடுநாள் தரைக்கிடை கிடந்த இழவுதீர, “அங்கே பரதமாரோப்ய என்கிறபடியே மடியிலேவைத்து ஸ்ரீபரதாழ்வானையும் அக்ரூரனையு மணைத்தாற்போலே அணைத்து பக்த்யதிஶயத்தாலே கோஸி என்கிறபடியே நீ யார் என்று கேட்க; அஹம் ப்ரஹ்மாஸ்மிஎன்று நான் ராஜகுமாரனென்ன நீ யித்தனை காலமும் செய்ததென் னென்று கேட்க, சாந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்தாழ்ந்தேன் என்ன, “நீ அத்தால் பெற்ற பலமேதென்றுகேட்க, அருநரகத்தழுந்தும் பயன் படைத்தேன் என்ன, பின்பு, நீ செய்ததென்னென்ன, “போந்தேன் என்ன, நீபோந்த விரகென் னென்றுகேட்க, புண்ணியனே என்ன, நீ அதினின்றும் போந்து செய்ததென்னென்ன, உன்னை யெய்தினேன் என்ன, “நம்மைக் கிட்டினவிடத்தில் நீ பெற்ற ப்ரயோஜனமென்னென்ன, என் தீவினைகள் தீர்ந்தேன் என்ன, செய்தது வாய்த்துச் செல்வனாய் நலமந்தமில்ல தோர் நாட்டில் வர்த்திக்கப் பெறாதே, இல்லை கண்டீரின்பம் என்கிற கொடு வுலகத்திலே நெடுங்காலமலமந்தாயே, பலமுந்து சீரிற்படியாதே, பன்மாமாயப் பல்பிறவியிலே படிந்து நோவுபட்டாயே, ஈறிலின்பத்திருவெள்ளத்தை யிழந்து, தடந் தோள் புணரின்ப வெள்ளத்திலே ஆழ்ந்து, நித்ய து:க்கிதனானாயே, அதனைப் பிழையெனக் கருதி நம்மைப்பற்றி நம்மைக்காண வேணுமென் றாசைப்பட்டபோதே வந்து முகங்காட்டப் பெற்றிலோமே, ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவன் என்கிறபடியே நாமிருந்த தேஶசத்தை நோக்கி அழுவது தொழுவதாய், “கூவிக்கொள்ளுங் காலமின்னங் குறுகாதோ எந்நாள் யானுன்னையினி வந்து கூடுவன் என்பதாய்க்கொண்டு நோவுபடும்படி தாழ்ந்தோமே, “துன்பக்கடல்புக்கு வைகுந்தனென்பதோர் தோணிபெறா துழல்கின்றேன் என்று க்லேஶித்த நீ அதினின்றுங் கரையேறி, “நின்மாதாள்சேர்ந்து நிற்பதெஞ்ஞான்றுகொலோ என்கிற இழவுதீர நம்மைக்கிட்டப்பெற்றாயே, “உள்ளுலாவி யுலர்ந்துலர்ந்து என்கிற தாபமறக் கூடியிருந்து குளிரப்பெற்றாயே, நம்முடைய ஸ்ருஷ்ட்யாதி வ்யாபாரங்கள் ஸபலமாயிற்றதே, ப்ரணஷ்டஸ்ய யதாலாப:” என்கிறபடியே நமக்குக் கிடையாதது கிடைத்ததே, உன்னுடைய வரவாலே யித்தேஶம் ஸநாதமாயிற்றதே, இக்கோஷ்டிக்கு நாயகரத்நம்போலே யிருக்க நீகிட்டி ஔஜ்வல்யத்தை யுண்டாக்கினாயே, “நடந்தகால்கள் நொந்தவோ என்று மநோஹரை ஶ்சாடுபிரார்த்ரயந்முதாஎன்கிறபடியே [3]ஏத்தாளிகளைப்போலே யேத்தி, ஓகமேகஸ்வநத்தாலே மயில்போலே ஆலிக்கும்படிபண்ணி, நோயெல்லாம் பெய்ததோ ராக்கையிலே யகப்பட்டு, நெடுங்காலம் நோவுபட்டு *மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணனைக் கிட்டி, உள்ள நோய்களெல்லாம் துரந்து, திருவருள் மூழ்கின இவனை,  நோய் விட்டுக்குளித்த புத்ரனைப் பிதா பார்த்துக்கொண்டிருக்குமா போலேயும், மாயக் கூத்தனுக்குப் பிழைத்த ஆழ்வாரைப் பார்த்துகொண்டிருக்குமா போலேயும், “லோசநாப்யாம் பிபந்நிவஎன்று ஸ்ரீவிபீஷணாழ்வானைப் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்குமா போலேயும், “என்னை நோக்காதொழிவதே என்கிற இழவுதீரத் தாமரைக்கண்களால் நோக்கி நெடுநாள் பட்ட விடாயெல்லாம் மாற, ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த மென்காற்கமலத் தடம்போலேயிருக்கிற பெருங்கண்மலர்ப் புண்டரீகங்களை யிவன்பக்கலிலே யொருமடைப்படவைத்து, எங்கும் பக்க நோக்கறி யாதே, தாயே தந்தையில் திருமங்கையாழ்வார் மநோரதித்தாற் போலேயும் ஆராவமுதிலும் இன்பம் பயக்கவிலும் நம்மாழ்வார் மநோரதித்தாற் போலேயும், இவன் மநோரதித்த மநோரதங்களை யெல்லாம் ஸபலமாக்கி, “உருக்காட்டாதே யொளிப்பாயோஎன்கிற இழவுதீர, விவ்ருணுதே தநூம்ஸ்வாம்என்கிறபடியே காசினொளியிற்றிகழும் வண்ணங்காட்டி நல்கியென்னைவிடான் என்கிறபடியே விடாதே, ஏஷ ஸர்வஸ்வபூதஸ்து என்கிறபடியே விட்டுவிட்டணைத்து, “கிந்நு ஸ்யாச் சித்தமோஹோயம் மருள்தானீதோ என்கிறபடியே நிரதிஶய வ்யாமோ ஹத்தைப் பண்ணி, பெரியபிராட்டியார் திருக்கையிலே காட்டிக்கொடுக்க, கம்ஸவதாநந்தரம் க்ருஷ்ணனைக்கண்ட தேவகியாரைப்போலே விம்மிப்பாய்கிற ஸ்தந்யத்தாலே யுடம்பெங்கும் நனையும்படி யணைத்து, உபயவிபூத்யைஶ்வர் யத்தையுங்கொடுக்க, பூவளருந்திருமகளா லருள்பெற்று, மடியில் நின்று மிழிந்து போந்து, செய்யவுடையுந் திருமுகமும் செங்கனிவாயுங் குழலுங்கண்டு என்கிறபடியே முன்பேபோந்து முன்புத்தையழகை யநுபவித்து, கிண்ணகத்தை யெதிர்ச்செறிக்க வொண்ணாதாப்போலே நேர்நின்றநுபவிக்க வொண்ணாமையாலே அட்டத்திலேபோந்து அங்குத்தையழகை யநுபவித்து, அதுவிட்டுப் பூட்டாவிடில் தரிக்கவொண்ணாமை யாலே பின்னேபோந்து, பின்புத்தை யழகை யநுபவித்து பூர்வாங்காதிகா பராங்க கலஹம் என்று அதில் முன்பு தானே நன்றாயிருக்கையாலே திரியவும் முன்னே போந்து, ஸௌந்தர்ய தரங்கதாடக தாளசித்தவ்ருத்தியாய், உத்தம் ஸிதாஞ்ஜலியாய், வளையவளையவந்து, முழுசி வண்டாடிய தண்டுழாயின் மொய்ம் மலர்க்கண்ணியும் மேனியஞ்சாந்திழுசிய கோலமிருந்தவா றெங்ஙனஞ் சொல்லுகேனோ னல்லா ரெழுதிய தாமரையன்னகண்ணு மேந்தெழிலாக்கமுந் தோளும்வாயு மழகியதா மிவரார்கொலென்ன, அச்சோவொருவரழகியவா என்று விஸ்மித ஹ்ருதயனாய், அந்தாமத்தன்பு முடிச்சோதிதொடக்கமானவற்றில் நம்மாழ்வாரநுபவித்தாப் போலே தன்னைப்பெற்ற ப்ரீதியால் வந்த செவ்வியை யநுபவித்து யத்ரநாந்யத் பஶ்யதிஎன்கிறபடியே புறம்பொன்றில் நெஞ்சுசெல்லாதே ஹாவு ஹாவு ஹாவு மஹமந்ந மஹமந்நம்அல்லிமாமலராள் தன்னொடு மடியேன் கண்டுகொண் டல்லல் தீர்ந்தேனே ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக் கண்டசதிர்கண் டொழிந்தே னடைந்தேனுன் திருவடியே”, இசைவித்தென்னை யுன்தாளிணைக்கீ ழிருத்துமம்மானே”, பிறந்துஞ்செத்தும் நின்றிடரும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் என்று ப்ரீதிக்குப் போக்குவிட்டு வாயாரப்புகழ; ஸ்ரீவைகுண்டநாதனும் வானாடமருங் குளிர்விழிகளாலே கடாக்ஷித்து; ஸஸ்மிதமாக ஸ்நிக்ம்பீர மதுரமான பேச்சாலே முகப்பேகூவி, நின்செம்மா பாதபற்புத்தலைசேர்த்து என்றிவனபேக்ஷித்த படியே மலர்மகள் பிடிக்கும் கமலமன்ன குரைகழல்களாலே உத்தமாங்கத்தை யலங்கரித்து, தன்றாளின் கீழ்ச்சேர்த்து, நித்யகைங்கர்யத்திலே நியோகிக்க, தொண்டேசெய்தென்றுந் தொழுது வழி யொழுகப்பெற்று, வழுவிலாவடிமை செய்ய வேண்டு நாம் என்கிற அபிநிவேஶாதிஶயத்தாலே நாநாதேஹங்களைப் பரிக்ரஹித்து, அஶேஷஶேஷ வ்ருத்திகளிலுமந்வயித்து, அஸ்தாநேரக்ஷா வ்யஸநிகளான நித்யஸூரிகளோடே கூடச் சூழ்ந்திருந்து மங்களாஶாஸநம்பண்ணி, “சுழிபட்டோடுஞ் சுடர்ச்சோதி வெள்ளத்தின்புற்றிருந்து என்கிறபடியே அம்ருதஸாகராந்தர்நிமக்ந ஸர்வாவயவனாய்க்கொண்டு யாவத்காலமிருக்கும்.

பிள்ளைலோகாசார்யர் திருவடிகளே ஶரணம்.

அர்ச்சிராதி முற்றிற்று.


[1] இட்டளம்நெருங்கின விடம்
[2] கிண்ணகம் - ப்ரவாஹம்
[3] புகழ்வாரப்போலே

No comments:

Post a Comment

க₃த்₃யத்ரயம்

ஶ்ரீமதே ராமாநுஜாய நம : எம்பெருமானார் அருளிச் செய்த க ₃ த் ₃ யத்ரயம் [ ஶரணாக ₃ தி க ₃ த் ₃ யம் , ஶ்ரீரங்க ₃ க ₃ த் ₃ யம் , ஶ்ரீவை...